[X] Close

மத்தியப் பிரதேச விவசாயிகளை ராகுல் காந்தி ஏமாற்றிவிட்டார்: சிவ்ராஜ் சிங் சவுஹான் குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 07 May, 2019 13:17 pm
  • அ+ அ-

மத்தியப் பிரதேச விவசாயிகளின் கடன்களை ஆட்சிப் பொறுப்பேற்று 10 நாட்களுக்குள் தள்ளுபடி செய்வதாகக் கூறிய ராகுல் காந்தி ஏமாற்றி விட்டார் என்று அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுஹான் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஒருபக்கம் காங்கிரஸ் அரசு அனைத்து விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டதாகக் கூறுகிறது. ஆனால் உண்மையில், கடனைச் செலுத்தவில்லை என்று விவசாயிகளுக்கு இன்னும் நோட்டீஸ்கள் வந்துகொண்டிருக்கின்றன.

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைத்த 10 நாட்களுக்குள் அனைத்து விவசாயிகளின் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் காந்தி உறுதியளித்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அவர்கள் லட்சக்கணக்கான விவசாயிகளை ஏமாற்றிவிட்டனர்.

மொத்தம் 48 ஆயிரம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்வதாகக் கூறியவர்கள், 1,300 கோடி ரூபாயை மட்டுமே தள்ளுபடி செய்தனர். இந்தத் தொகை மட்டுமே வங்கிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, ''ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கட்டமாக ரூ.1,300 கோடியைத் தள்ளுபடி செய்தோம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால், மீதமுள்ளோரின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. இதுதொடர்பாக முதல்வரே விவசாயிகளுக்கு செய்தி அனுப்பியுள்ளார். அதில் தேர்தல் முடிந்த பிறகு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்'' என்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close