[X] Close

மோடியின் 5 ஆண்டு கால ஆட்சி மிகவும் வேதனைக்குள்ளானது; பேரழிவானது: மன்மோகன் சிங் ஆவேசம்


5

  • kamadenu
  • Posted: 05 May, 2019 17:51 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

பிரதமர் மோடியின் 5 ஆண்டு கால ஆட்சி தேசத்தின் இளைஞர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், ஒவ்வொரு ஜனநாயக அமைப்புக்கும் மிகவும் பேரழிவானது, வேதனைதரக்கூடியது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காட்டமாகத் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் பிடிஐ நிறுவனத்துக்கு பிரத்யேகமாகப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

மக்கள் வெறுப்பு

''மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற மனநிலையில்தான்  இந்த தேசத்தின் மக்கள் இருக்கிறார்கள். இந்த ஆட்சியில் அனைவருக்குமான வளர்ச்சி இருப்பதாக நான் நம்பவில்லை.

நாட்டில் மோடி அலை வீசுவதாக நான் கருதவும் இல்லை. தங்களின் அரசியல் நிலைத்தன்மைக்காக மக்களின் ஒற்றுமையைக் குலைப்பது கவலையளிக்கிறது. சமூகத்தைப் பிளவுபடுத்துதல், வெறுப்புணர்வு ஆகியவை பாஜகவின் ஆட்சியில் செழித்துள்ளன. உடனடியாக மக்கள் இந்த அரசை வெளியேறுவதற்கான பாதையைக் காட்ட வேண்டும்.

பண மதிப்பிழப்பு மிகப்பெரிய ஊழல்

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் ஆட்சியில் ஊழலின் நெடி அதிகமாகி, கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு விகிதங்களில் உயர்ந்துவிட்டது. என்னைப் பொறுத்தவரை சுதந்திர இந்தியாவில், பண மதிப்பிழப்பு என்பது மிகப்பெரிய ஊழலாக கருதுகிறேன். அரசியல் தலைவர்களுக்கும், வங்கிகளை மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பியவர்களுக்கும் இடையே நிச்சயமாக கூட்டு இருக்கிறது.

அக்கறையில்லாத பாக். கொள்கை

பிரதமர் மோடியின் பாகிஸ்தானுக்கான வெளியுறவுக்கொள்கை என்பது எந்தவிதமான அக்கறையில்லாதது, கவனக்குறைவாக கையாளப்பட்டு ஏராளமான மாற்றங்களைக் கொண்டுவந்தது.

பாகிஸ்தானுக்கு அழைப்பின்றி சென்ற பிரதமர் மோடி, பதான்கோட் விமான தளத்துக்கு ஐஎஸ்ஐ அமைப்பை அழைத்து வந்தார். அங்கு தீவிரவாதத் தாக்குதலுக்கு  பதான்கோட் விமானத்தளம் ஆளானது.

நாட்டின் வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை தேச நலன்களை அடிப்படையாக, வழிகாட்டியாக வைத்தே பயணித்திருக்கிறது. ஆனால், ஒருபோதும் தனி மனிதரின் தோற்றத்தை வளர்ப்பதற்காக அல்ல.

பிரதமர் மோடியால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் குறைபாட்டை எதிர்நோக்கி வருகிறது. மிகுந்த ஆபத்தான சூழலில் நாட்டின் பொருளாதாரத்தை விட்டுவிட்டு மோடி அரசு செல்கிறது. தற்போதுள்ள ஆட்சியாளர்கள் நாள்தோறும் நிர்வாகத்தில் செய்யும் அரிதாரப்பூச்சு மாற்றங்கள் மக்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்குகிறது. இந்த அரசின் மாயைக்கும், சுய அதிகாரத்தைப் பெருக்கிக்கொள்ளும் போக்கிற்கும் எதிராக ஒருபோக்கு தேசத்தில் நிலவுகிறது.

Manmohan_Modi.jpg 

புல்வாமா தாக்குதலின்போது படப்படிப்பு

புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட பின், மத்திய அரசின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் கூட்டங்களில் பிரதமர் மோடியைப் பார்ப்பதற்குப் பதிலாக, ஜிம் கார்பெர்ட் தேசியப் பூங்காவில் திரைப்பட படப்பிடிப்புகளில் மோடி இருந்தது என்னை ஆழ்ந்த துயரத்துக்குள்ளாக்கியது. புல்வாமா தாக்குதல் ஒட்டுமொத்தமாக உளவுத்துறையில் தோல்வியால் நடந்தது. அரசு தீவிரவாதத்தை எதிர்க்க தயாரற்ற நிலையில் இருந்ததைக் காட்டுகிறது.

தீவிரவாதம் அதிகரிப்பு

தேசியவாதம், நாட்டுப்பற்று என்று அடிக்கடி மோடி பேசுகிறார். ஒரு பொய்யை நூறு முறை கூறினால் அது உண்மையாகிவிடாது. தேசப் பாதுகாப்பு, தீவிரவாத ஒழப்பு குறித்து பேசும் மோடி அரசில்தான் தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் மட்டும் தீவிரவாதத் தாக்குதல் 176 சதவீதம் அதிகரித்துள்ளன. எல்லை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் தாக்கும் சம்பவங்கள் கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளது.

மோசமான நிர்வாகத்தின், நம்பகத்தன்மையின்மையின் துயரக் கதையாகவே 5 ஆண்டுகால மோடி அரசு இருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தபோது, நல்ல காலம் வரும் என்று உறுதியளித்தார். தற்போது மோடியின் 5 ஆண்டுகால ஆட்சி முடியும்போது, நாட்டின் இளைஞர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், வணிகம், ஜனநாய அமைப்புகள் அனைத்தும் அதிர்ச்சியும், பேரழிவுக்கும் ஆளாகி இருக்கிறது.

ஒருமனிதரால் முடியாது

பல்வேறு மக்களைக் கொண்டிருக்கும் நமது தேசத்தில், மக்களின் அபிலாஷைகளுக்கும், நம்பிக்கைக்கும் ஒரு மனிதரின் கொள்கைகளாலும், விருப்பத்தாலும் எந்தவிதமான நீதியையும் வழங்கிவிட முடியாது. இந்தியாவில் பிரதிநித்துவம் என்பது மிகவும் முக்கியமானது. 130 கோடி மக்களின் விருப்பங்களையும் ஒரு தனிமனிதர் பிரதிபலிக்க முடியாது. அவர்கள் சந்திக்கும் அனைத்துவிதமான பிரச்சினைகளைத் தீர்க்கவும் முடியாது. அதிபர் முறை போன்ற தேர்தல் முறை இந்தியாவில் ஒருபோதும் சரிவராது. ஒரு மனிதர்தான் அனைத்து ஞானத்தின் அதிபதி என்ற கொள்கை இந்தியாவுக்குப் பொருந்தாது''.

இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close