இந்தியர்களில் 3-ல் ஒருவருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்


மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

புதுடெல்லி: மூன்று இந்தியர்களில் ஒருவர், கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

கல்லீரல் பித்தத்தை சுரக்க உதவுகிறது. இது கொழுப்புகளை ஜீரணிக்க உதவுகிறது. மனித உடல்அதிகப்படியான கொழுப்பை உற்பத்தி செய்யும்போதோ அல்லதுபோதுமான அளவு கொழுப்பை வளர்சிதை மாற்றம் செய்யாதபோதோ கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படுகிறது.

சர்வதேச அளவில் 1,000 பேரில்47 பேருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு காணப்படுகிறது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை 3 பேரில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

கொழுப்பு கல்லீரல் நோயை கட்டுப்படுத்த, குணப்படுத்த இந்தியாவும் பிரான்ஸும் இணைந்துபுதிய அமைப்பை தொடங்கிஉள்ளன. இதில் இந்தியாவை சேர்ந்த 17 மருத்துவர்களும் பிரான்ஸை சேர்ந்த 11 மருத்துவர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்திய-பிரெஞ்சு கல்லீரல், வளர்சிதை மாற்ற நோய்களின் சிகிச்சைக்கான கூட்டமைப்பு என்றுபெயரிடப்பட்டுள்ள புதிய அமைப்பை மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்திய துணை கண்டம் மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் மக்களின் வாழ்க்கை நடைமுறைகள், உணவு பழக்க வழக்கங்கள் முழுமையாக மாறி உள்ளன. தவறான வாழ்வியல் நடைமுறை, உணவு வகைகளால் நீரிழிவு, உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. இதன்காரணமாக கொழுப்பு கல்லீரல் நோயும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரை 3 பேரில் ஒருவர் கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கே இந்த நோய் ஏற்படுகிறது. ஆனால் இந்தியாவில் நிலைமை வேறுவிதமாக இருக்கிறது. கல்லீரல் கொழுப்பு நோயால் பாதிக்கப்பட்ட இந்தியர்களில் 20 சதவீதம் பேர் உடல் பருமன் இல்லாதவர்கள் ஆவர்.

இந்தியா, பிரான்ஸில் மதுபானம்குடிப்பவர்கள் கல்லீரல் கொழுப்புநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மதுபானம் அருந்தாதவர்களுக்கும் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

கல்லீரல் கொழுப்பு நோயைகுறைந்த கட்டணத்தில் கண்டறிவதற்கான பரிசோதனைகள் அவசியமாகிறது. ஆரம்ப நிலையிலேயே இந்த நோயை கண்டுபிடித்தால் நோயாளிகளுக்கு எளிதாக சிகிச்சை அளிக்க முடியும். நோய் முற்றிய நிலையில் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும்.

நோய்களை குணப்படுத்தும் மருத்துவம் மட்டுமன்றி நோய் தடுப்பு மருத்துவத்திலும் இந்தியா முன்னோடியாக விளங்குகிறது. எங்களோடு பிரான்ஸும் கைகோத்திருப்பதால் கல்லீரல் கொழுப்பு நோயை குணப்படுத்தும் சிகிச்சையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

காஷ்மீரின் ஜம்மு பகுதியை சேர்ந்த அமைச்சர் ஜிதேந்திர சிங், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். இந்தியாவின் தலைசிறந்த நீரிழிவு நோய் மருத்துவர்களில் அவரும் ஒருவர்.