அயோத்தியில் தோற்கடித்தது போல் குஜராத்தில் பாஜகவை காங்கிரஸ் தோற்கடிக்கும்: ராகுல் காந்தி


ராகுல் காந்தி | கோப்புப்படம்

அகமதாபாத்: அயோத்தியில் பாஜக.வை தோற்கடித்தது போல், குஜராத்தில் பாஜக.வை காங்கிரஸ் தோற்கடிக்கும் என அகமதாபாத்தில் தொண்டர்களிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

மக்களவையில் இந்துக்கள் பற்றி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்த கருத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் முன்புபாஜக இளைஞர் அணியினர் கடந்த 2-ம் தேதி போராட்டம் நடத்தினர். அப்போது இருதரப்பினர் இடையே கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதில் போலீஸார் உட்பட பலர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் காங்கிரஸ் அலுவலகம் சேதம் அடைந்தது.

இந்நிலையில் அகமதாபாத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி நேற்று பேசியதாவது: பாஜகவினர் நம்மை அச்சுறுத்துகின்றனர். நமக்கு சவாலாக இருக்கின்றனர். நமது அலுவலகத்தை சேதப்படுத்தியுள்ளனர். நமது அலுவலகத்தை அவர்கள் சேதப்படுத்தியதுபோல், நாம் ஒன்றிணைந்து குஜராத்தில் பாஜக அரசை உடைக்க வேண்டும். அயோத்தியில் பாஜக.வை தோற்கடித்தது போல், குஜராத் தேர்தலில்பாஜக.வையும், நரேந்திர மோடியையும் நாம் தோற்கடிப்போம் என்பதைஎழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி அயோத்தியில் போட்டியிட முதலில் திட்டமிட்டார். ஆனால், அங்கு போட்டியிட்டால், அவர் தோற்கடிக்கப்படுவார், அவரது அரசியல்வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும்என அங்கு கருத்துகணிப்பு நடத்தியவர்கள் பிரதமருக்கு ஆலோசனை கூறினர்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு, உள்ளூர் நபர்கள் ஒருவர்கூட அழைக்கப்படாததால், அயோத்தி மக்கள் கோபம் அடைந்தனர். குஜராத்தில் பாஜகவை தோற்கடித்து காங்கிரஸ் வெற்றி பெறும். அங்கிருந்து புதிய தொடக்கம் ஏற்படும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

டெல்லி ஜிடிபி நகரில் தின ஊதியம் பெறும் தொழிலாளர்களை சந்தித்து பேசியபின் எக்ஸ் தளத்தில்ராகுல் காந்தி விடுத்த செய்தியில் கூறியிருப்பதாவது:

மோடி அரசில், கட்டுமான தொழிலாளர்கள் கஷ்டங்களை சந்திக்கின்றனர். ஒரு நாள் ஊதியத்தில், 4 நாள் வாழ்க்கையை அவர்கள் சமாளிக்கின்றனர். அவர்களிடம் சேமிப்பு இல்லை. வட்டி செலுத்தி கடன் சுமையில் உள்ளனர்.

இந்தியாவின் எதிர்காலத்தைஉருவாக்குபவர்களின் எதிர்காலம்அபாயத்தில் உள்ளது. உழைக்கும் தொழிலாளர்களுக்கு முழு உரிமைகளும், பாதுகாப்பும், மரியாதையும் கிடைக்கும் என நான் உறுதியளிக்கிறேன். இதுதான் எனது தீர்மானம்’’ என கூறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் ரயில்வே ஓட்டுனர்களை கடந்த வெள்ளிக்கிழமை ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.ஆள்பற்றாக்குறை காரணமாக போதிய ஓய்வின்றி பணியாற்றுவதாக ராகுல் காந்தியிடம் ரயில் ஓட்டுனர்கள் தெரிவித்தனர். தொழிலாளர்களுக்கு முழு உரிமை, பாதுகாப்பு, மரியாதை கிடைக்கும் என நான் உறுதி அளிக்கிறேன்.