[X] Close

முப்படையும் பிரதமர் மோடியின் சொத்தல்ல; வீடியோ கேம் எனக் கூறி ராணுவத்தை அவமதித்துவிட்டார்: ராகுல் காந்தி தாக்கு


  • kamadenu
  • Posted: 04 May, 2019 12:18 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

காங்கிரஸ் ஆட்சியில் ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதல்களை 'வீடியோ கேம்' என்று கூறி ராணுவத்தை பிரதமர் மோடி அவமதித்துவிட்டார்  என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாகப் பேசியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''முப்படைகளும்  பிரதமர் மோடியின் தனிப்பட்ட சொத்து அல்ல. ஆனால், முப்படைகளும் தன்னுடைய சொத்துபோல நினைத்து மோடி பேசி, நடந்து வருகிறார்.

துல்லியத் தாக்குதல்கள் அனைத்தையும் மோடி நேரில் போய் நடத்தவில்லை. நம்முடைய ராணுவம் நடத்தியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல்கள் அனைத்தும் உண்மையான தாக்குதல்கள் அல்ல. அது வீடியோ கேம் என்று மோடி பேசியிருந்தால் அவர் காங்கிரஸ் கட்சியை அவமதிக்கவில்லை. நாட்டின் ராணுவத்தை அவமதித்தது போன்றதாகும்.

ஊடகங்கள் தேவைப்பட்டால் நான் பேசுவதை எழுதிக்கொள்ளுங்கள். ராணுவ ஜெனரல் விக்ரம் சிங் தெரிவித்த கூற்றில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 6 துல்லியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அதற்கான தேதியையும் அவர் தெரிவித்துள்ளார். 

இவற்றைச் செய்தது நமது ராணுவம்தான். இதை நாங்கள் அரசியல் செய்யவில்லை, பேசவும் இல்லை. ஆதலால், நமது பிரதமர் மோடி நமது ராணுவத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.

தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்திவிட்டோம் என்று பிரதமர் மோடி பேசுகிறார். மசூத் அசாரை பாகிஸ்தானுக்கு அனுப்பியது யார்? காங்கிரஸ் கட்சியா மசூத் அசாரை பாகிஸ்தானுக்கு அனுப்பியது. தீவிரவாதத்துடன் எந்த அரசு பேரம் பேசியது? காங்கிரஸ் ஒருபோதும் மசூத் அசாரை அனுப்பவில்லை. பாஜகதான் தீவிரவாதத்துடன் சமரசம் செய்துகொண்டது.

இந்த தேசத்து மக்கள் முன் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை வேலையின்மைதான். மோடியின் அரசால், நாட்டின் பொருளாதாரம் அழிக்கப்பட்டுவிட்டது. இதை நாட்டு மக்கள் புரிந்துகொண்டார்கள். ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக மோடி வாக்குறுதியளித்தார், ஆனால் வழங்கவில்லை.

ஆனால், எங்களின் தேர்தல் வாக்குறுதியில் இந்த முறை வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு அதிகமான முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறு உருவாக்குவோம், என்ன செய்யப்போகிறோம் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ஒரேநாள் இரவில் கொண்டுவந்து ஏழைகளை நோகடித்துவிட்டார். பொருளாதாரத்தை அழித்துவிட்டார். ஆனால், நாங்கள் கொண்டுவரும் நியாய் திட்டம் மூலம், பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி அடையும். மக்கள் பணத்தைப் பெறுவார்கள். சந்தையில் செலவு செய்வார்கள், சந்தையில் பொருட்களுக்கு தேவை அதிகரிக்கும். தொழிற்சாலையில் உற்பத்தி பெருகி பொருளாதாரம் சுழற்சி நிலைக்கு வந்து ஊக்கம் பெறும்.

பிரதமர் மோடி வல்லுநர் அல்ல. அவர் எந்த விஷயத்தையும் வல்லுநர்களுடன் கலந்தாய்வு செய்வதில்லை. நான் அவருடன் வேலையின்மை, ஊழல் குறித்து விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். 10 நிமிடங்கள் போதும் விவாதம் செய்ய.ஆனால்,எங்கு வேண்டுமானாலும்விவாதம் செய்ய நான் தயார். ஆனால், அனில் அம்பானி வீட்டில் மட்டும் நடத்தக்கூடாது.

நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாக முறையை மோடி அழித்துவிட்டார். இதுவரை குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 4 தேர்தல்களில் நாங்கள் அவருடன்  போட்டியிட்டுள்ளோம். மோடி இந்த தேர்தலில் வெல்லப்போவதில்லை என்பதை உணர்வார். நிதர்சனம் அதுதான். அது மோடியின் முகத்தில் தெரிகிறது.

இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடையும். மக்களவைத் தேர்தலில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இந்தத் தேர்தலில் பிரதானமாக இருப்பது வேலையின்மை, பிரதமரின் ஊழல்தான். எங்களின் கணிப்பின்படி, தேர்தலில் பாஜக தோல்வி அடையும்''.

இவ்வாறு ராகுல் காந்தி  பேசினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close