[X] Close

''பழங்குடியினரை சுட்டுக்கொல்ல மோடி அரசு புதிய சட்டம்'' - ராகுல் பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


  • kamadenu
  • Posted: 02 May, 2019 11:47 am
  • அ+ அ-

-பிடிஐ

பழங்குடியினரை சுட்டுக்கொல்ல அனுமதிக்கும் புதிய சட்டத்தை மோடி அரசு இயற்றியதாக பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஷாஹ்டோல் என்ற இடத்தில் கடந்த ஏப்ரல் 23 அன்று ராகுல் காந்தி பிரச்சாரத்தில் பேசியதை மேற்கோளிட்டு சுட்டிக்காட்டியுள்ள தேர்தல் ஆணையம் தனது அரசியல் எதிர்ப்பாளர்களை சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுகளை தெரிவித்து விமர்சனம் செய்தது தேர்தல் நடத்தை விதிமீறலாகும் என்று நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் நோட்டீஸ் பெற்ற 48 மணி நேரத்தில் விளக்கம் அளிக்காவிட்டால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு பாஜக நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தை அணுகி புகார் அளித்ததன் பேரில் நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம், மத்திய பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கும் விளக்க அறிக்கை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் பிரச்சார பொதுக்கூட்டத்தில்  பேசிய ராகுல் காந்தி இந்தி உரையின் மொழியாக்கம் இணையத்தில் காணக் கிடைக்கிறது. அதில், ''நரேந்திர மோடி அரசாங்கம் பழங்குடி மக்களுக்கு புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளது. பழங்குடியினர் சுட்டுக்கொல்லப்படலாம். பழங்குடியினரின் நிலங்களை அரசாங்கம் பறித்துக்கொள்ளும். உங்கள் காடுகளையும் தண்ணீரையும் கூட எடுத்துக்கொள்ளும். பின்னர் பழங்குடியினர் சுட்டுக்கொள்ளப்படுவார்கள்'' என்று பேசியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பல்வேறு வகைகளிலும் சட்ட சிக்கல் ஏற்பட்டுக்கொண்டே வருகிறது.

ஓரிரு தினங்களுக்கு முன் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அளித்த புகாரின் அடிப்படையில் ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து விளக்கம் கேட்டு உள்துறை அமைச்சகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு முன்பாக பிரதமர் மோடியை விமர்சித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டார். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளதாகக் கூறி தேர்தல் ஆணையம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close