[X] Close
 

உங்களுக்கு மஞ்சள்காமாலை வரும்: தொண்டர்களை சபித்த உ.பி., அமைச்சர்


people-attending-rival-s-rallies-will-be-cursed-with-jaundice

  • பாரதி
  • Posted: 21 May, 2018 16:21 pm
  • அ+ அ-

உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் தனது கட்சி அல்லாது பிற கட்சிகள் நடத்தும் பேரணிகளில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்கு மஞ்சள்காமாலை நோய் வரும் என சபித்திருக்கிறார். அவரது சாபம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. பாஜக கூட்டணி கட்சியான சுஹல்தேவ் பரத் சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பார். இவர் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார். உத்தரப் பிரதேசத்தில் மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும் என அங்கு பாஜக ஆட்சி அமைந்ததுமுதல் வலியுறுத்திவருகிறார். ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும் அவ்வப்போது அரசுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்வார்.

அந்த வரிசையில் அவர் அண்மையில் கலந்துகொண்ட மதுவிலக்கு பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அவர் பேசியதாவது: "எனது அரசியல் எதிரிகளின் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களுக்கு மஞ்சள்காமாலை நோய் வரும். இது எனது சாபம். அந்த சாப விமோசனம் கிடைக்க நான் மட்டுமே மருந்துதர முடியும்" என்றார்.

இவ்வாறு, கட்சித் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் சாபம் விடுத்த அமைச்சரை மக்கள் வசைபாடி வருகின்றனர்.

ராஜ்புத், யாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற சமூகத்தினரைவிட அதிகமாக மது அருந்துகின்றனர் எனக் கூறி அண்மையில் ஒரு சர்ச்சையில் சிக்கினார். அந்த சர்ச்சை அடங்குவதற்குள் சாபம் விட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

பிரதமருக்கு கோரிக்கை..

மதுவிலக்குப் பிரச்சாரக் கூட்டத்தில் மேலும் பேசிய அவர், "உத்தரப் பிரதேச பொதுத் தேர்தலின்போது, குஜராத் மாதிரி ஆட்சி உ.பி.யிலும் அமையும் எனப் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை அவருக்கு நான் இப்போது நினைவுபடுத்துகிறேன். அத்துடன் மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தி வளர்ச்சிப் பாதைகளைத் திறக்க வழிசெய்யுமாறு கேட்கிறேன்" எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

 
 



MGR - Kindle Edition


[X] Close