தன்னைக் கொத்திய பாம்பை கடித்து துப்பிய ரயில்வே தொழிலாளி!


பாம்பு (கோப்பு படம்).

தன்னைக் கொத்திய பாம்பை ரயில்வே தொழிலாளி ஒருவர் மூன்று முறை கடித்துக் கொன்ற சம்பவம் பாட்னாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்பு கடித்து விஷம் ஏறி உயிரிழப்பவர்களை விட, பாம்பு கடித்து விட்டது என்ற பதற்றத்திலும், பீதியிலும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆனால், தன்னைக் கடித்த பாம்பை பிடித்து மூன்று முறை ரயில்வே தொழிலாளி ஒருவர் கடித்துள்ளார். அந்த தொழிலாளி பிழைத்துக் கொண்ட நிலையில், அவரைக் கடித்த பாம்பு கடிபட்டு உயிரிழந்து விட்டது.

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜௌலி பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் லோஹர் என்ற ரயில்வே பாதையில் பணியாற்றும் தொழிலாளி கடந்த ஜூலை 2ம் தேதியன்று பணிகளை முடித்துவிட்டு ரௌஜாலியில் உள்ள முகாமில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று சந்தோஷ் லோஹரை கடித்தது. ஆனால், எந்த பீதியும் அடையாத சந்தோஷ், அந்த பாம்பைப் பிடித்து மூன்று முறை கடித்துள்ளார். இதனால், அந்த பாம்பு உயிரிழந்தது.

இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடன் பணியாற்றும் தொழிலாளர்கள் உடனடியாக சந்தோஷ் லோஹரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவருக்கு சிகிச்சை அளித்த மருதுதுவர் சதீஷ் சந்திரா கூறுகையில், சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அந்த நபர் காப்பாற்றப்பட்டுள்ர். விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறினார். சந்தோஷ் லோஹரை கடித்த பாம்பு விஷமற்றது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.