[X] Close

மோடி பிரதமர் ஆகாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்- ஷியா வாரிய தலைவர் வசீம்


  • kamadenu
  • Posted: 01 May, 2019 08:46 am
  • அ+ அ-

-ஆர்.ஷபிமுன்னா

மோடி மீண்டும் பிரதமர் ஆகாவிட்டால் தாம் தற்கொலை செய்து கொள்வதாக உத்தரபிரதேச ஷியா வக்ஃபு வாரியத்தின் தலைவர் வசீம் ரிஜ்வீ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, உத்தரபிரதேசத்தில் செய்தியாளர்களிடம் வசீம் ரிஜ்வீ நேற்று கூறியதாவது:தேசம் என்பது அனைத்து மதங்களையும் விட உயர்ந்தது. தேசிய நலன் தொடர்பாக நான் எப்போது பேசினாலும், பிற்போக்கான முஸ்லிம்கள் என்னை கொன்று விடுவதாக மிரட்டுகின்றனர்.

பிரதமர் மோடியின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், எனது தலையை கொய்து விடுவதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர். மோடி மீது நம் நாட்டு மக்கள் அன்பு செலுத்துகின்றனர்.

இதுதொடர்பான அச்சம், தேசத்துரோகிகள் இடையே நிலவுகிறது. நம் நாட்டின் திறமைவாய்ந்த பிரதமராக மோடி உள்ளார். எனவே, அவர் மீண்டும் பிரதமராகாமல், வேறு கட்சியின் தலைவர் அப்பதவியில் அமர்ந்தால், நான் அயோத்தியின் ராமர் கோயில் வாசலில் தற்கொலை செய்து கொள்வேன்.

ஏனெனில், துரோகிகளின் கைகளில் சிக்கி உயிரிழப்பதை விட தற்கொலை செய்வது மரியாதைக்கு உரியதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

உ.பி.யின் ஷியா பிரிவு முஸ்லிம்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வசீம் ரிஜ்வீ சர்ச்சைக்குரியவராக கருதப்படுகிறார்.

தாம் வகிக்கும் வக்ஃபு வாரியப் பதவியில் நடைபெற்ற ஊழல் முறைகேடு தொடர்பான விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக, பாஜகவுக்கு சாதகமாக ரிஜ்வீ செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதனால், ரிஜ்வீயின் செயல்பாடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஷியா மற்றும் சன்னி ஆகிய இரு பிரிவு முஸ்லிம்களாலும் எதிர்ப்புக்கு உள்ளாகி வருகிறது.

ஏற்கனவே, அயோத்தி வழக்கில், இந்துக்களுக்காக முஸ்லீம்கள் விட்டுக்கொடுக்க வேண்டும் என கூறியது பெரும் சர்ச்சையானது.

அதன் பின்னர், டெல்லியின் வரலாற்று சின்னமான ஹுமாயூன் சமாதியை இடித்து முஸ்லீம்களின் இடுகாடாக மாற்ற வேண்டும் என தெரிவித்ததற்கும் அவருக்கு கண்டனம் எழுந்தது. பின்னர், மதரஸாக்களில் தீவிரவாதம் பரவுவதாக ரிஜ்வீ கூறியதை எதிர்த்து அவர் மீது பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் வழக்குகளும் தொடுத்திருப்பது நினைவுகூரத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close