[X] Close

தேர்தல் விதிகளை மீறும் பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு தயக்கம்: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடும் தாக்கு


  • kamadenu
  • Posted: 28 Apr, 2019 09:22 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

தேர்தல் விதிகளை மீறும் பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயங்கி வருகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கூறினார்.

இதுகுறித்து மும்பையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர்கூறும்போது, “மக்களவைத் தேர்தலுக்காக பிரதமர் மோடி நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் பல இடங்களில் பிரச்சாரம் செய்கிறார். ஒவ்வொரு பிரச்சாரத்துக்கும் ரூ.10 கோடி அளவுக்கு செலவு செய்யப்படுகிறது. தேர்தல் விதிகளை மீறி இந்த செலவு செய்யப்படுகிறது.

ஆனால் விதிகளை மீறும் பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டி வருகிறது. இதனால் தனது கடமைகளில் இருந்து ஆணையம் தவறிவிட்டது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 50 இடங்கள் கூட கிடைக்காது என்று பிரதமர் மோடி பேசி வருகிறார். ஆனால் நடந்து முடிந்த 3 கட்டத் தேர்தல்களின் முடிவில் 303 தொகுதிகளில் காங்கிரஸுக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது. கடந்த 5 ஆண்டு காலங்களில் விவசாயிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டுள்ளது. நாட்டின் அடிப்படை மதிப்பீடுகளான சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம், ஒருமைப்பாடு ஆகியவை ஆபத்தில் உள்ளன” என்றார்.

உடனிருந்த மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் அசோக்சவாண் கூறும்போது, “மகாராஷ்டிர மாநிலம் துலேவுக்கு நேற்றுமத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வந்த விமானத்திலிருந்து ஒரு பெட்டி எடுத்து வரப்பட்டது. அதில்மாம்பழங்கள் இருந்ததாக பாஜகவினர் கூறுகின்றனர். ஆனால் மாம்பழங்கள் இல்லை. வேறு ஏதோ இருந்திருக்கிறது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கவேண்டும்” என்றார்.

அந்த பெட்டியில் ரூ.15 கோடி ரொக்கம் இருந்ததாக காங்கிரஸ் சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை அமைச்சர் சுரேஷ் பிரபு மறுத்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close