அசாம் | அபாய அளவைத் தாண்டி ஓடும் பிரம்மபுத்திரா: நீரின் அளவு குறைந்து வருவதாக முதல்வர் தகவல்


குவஹாதி: அபாயக் கட்டத்தை தாண்டி பிரம்மபுத்திரா மற்றும் கிளை நதிகளில் நீர் ஓடும் நிலையில் மாநிலத்தில் வெள்ள பாதிப்புகள் சீரடைந்து வருவதாகவும், நீரின் அளவு குறைந்து வருவதாகவும் அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா திப்ருகர் பகுதியில் தண்ணீர் தேங்கிய பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாநிலத்தில் வெள்ள பாதிப்பு நிலைமைகள் சீரடைந்து வருகிறது. தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது என்றாலும், உள்ளார்ந்த பகுதிகளில் நிலைமை தொடர்ந்து அப்படியே நீடித்து வருகிறது. மக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 2 நிமிடங்களில் மின்சாரம் வழங்கிவிட முடியும் என்றாலும், அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியிருப்பதால் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திப்ரூகரின் வடிகால்களில் ஆக்கிரமிப்புகளால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கியுள்ளன. இதன் காரணமாக வாய்க்காலுக்குள் உபகரணங்களை இறக்கி அடைப்புகளை அகற்ற முடியவில்லை. தண்ணீர் குறைந்ததும் சிறிய உபகரணங்கள் மூலம் அவைகளை எவ்வாறு சரி செய்ய முடியும் என்று ஆலோசிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

திப்ரூகரில் வெள்ள நிலைமை சீராகி வருவதாக முதல்வர் கூறினாலும், பிரம்மபுத்திரா, திகாரு மற்றும் கொல்லாங் நதிகள் அபாய கட்டத்தைத் தாண்டி பாய்ந்து மிகப்பெரிய பரப்பை நீரில் மூழ்கச் செய்துள்ளன. இதனால் கம்ரூப் மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அசாமின் 29 மாவட்டங்களில் 21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் இந்த ஆண்டு வெள்ள பாதிப்பு, நிலச்சரிவு, மின்னல் தாக்கி 62 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அசாம் மாநில பேரிடர் மீட்பு மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு துறையினருடன் மாநில பேரிடர் மீட்பு படையும் ஈடுபட்டுள்ளது.

இதனிடையே, மாநில ஆளுநர் குலாந்த் சந்த் கடாரியா மற்றும் மத்திய அமைச்சர் சர்மானந்த சோனோவால் வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை ஆய்வு செய்தனர். அடுத்த மூன்று நாட்களுக்கு மாநில அமைச்சர்கள் பல்வேறு மாவட்டங்களில் நிலவரங்களை ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.