[X] Close

வாரணாசியில் பிரதமர் மோடி இன்று மனு தாக்கல்: மெகா பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்


  • kamadenu
  • Posted: 26 Apr, 2019 08:14 am
  • அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதை முன்னிட்டு வாரணாசியில் நேற்று லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட ‘மெகா’ பேரணி நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். அதற்காக, இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். வாரணாசி மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொள்ளும் வகையிலும் பாஜகவினரை உற்சாகப்படுத்தும் வகையிலும் நேற்று பிரம்மாண்ட பேரணி நடந்தது. பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து நேற்று மாலை 5 மணி அளவில் பேரணி தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி திறந்த வாகனத்தில் சென்றார்.

இந்த மெகா பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற னர். சாலையின் இரு புறமும் மக்கள் திரண்டு நின்று மோடிக்கு வரவேற்பு அளித்தனர். மோடி மீது பூக்களை தூவி வரவேற்றனர். வாரணாசியில் எங்கு பார்த்தாலும் ‘மோதி... மோதி’ என்ற கோஷம் எதிரொலித்தது. 6 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் மக்களின் வாழ்த்துக்களை கையசைத்து ஏற்றபடி பிரதமர் மோடி சென்றார்.

இந்தப் பேரணியில் பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக முதல்வர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர், கங்கை நதிக்கரையில் நடந்த தீப ஆராதனை வழிபாட்டு நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இன்று காலை 11 மணி அளவில் வாரணாசியில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தனது வேட்பு மனுவை பிரதமர் மோடி தாக்கல் செய்கிறார். முன்னதாக, பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிறகு, வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற கால பைரவர் கோயிலுக்குச் சென்று வழிபடுகிறார். அங்கிருந்து ஆட்சியர் அலுவலகம் சென்று வேட்பு மனுவை மோடி தாக்கல் செய்கிறார்.

மகனுடன் ஓ.பி.எஸ். பங்கேற்பு

வாரணாசியில் நடந்த மெகா பேரணியில் பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாள ரும் தமிழக துணை முதல்வரு மான ஓ.பன்னீர்செல்வம், அவரது மகனும் தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ரவீந்திரநாத் குமார் பங்கேற்றனர்.பேரணி முடிந்தபின் பாஜக தலைவர் அமித் ஷாவுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மனுதாக்கல் செய்யும்போது, தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வமும் உடன் பங்கேற்க உள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close