[X] Close

காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காது: ம.பி. காங். முதல்வர் கமல்நாத் கருத்து


  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 10:36 am
  • அ+ அ-

‘‘காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காது. டெல்லியில் புதிய ஆட்சி அமைக்க தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி ஏற்படுத்த வேண்டும்’’ என்று மத்தியப் பிரதேச முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் திட்டவட்டமாகக் கூறினார்.

ம.பி. முதல்வர் கமல்நாத் கடந்த சனிக்கிழமை இரவு, பிடிஐ செய்தி நிறுவனத்துக்குத் தனது இல்லத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:பாஜக.வுக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு இடங்கள் கிடைக்காது. மேலும், அந்தக் கட்சியுடன் வேறு எந்த பெரிய அரசியல் கட்சியும் தேர்தலுக்குப் பின்பு கூட்டணி வைக்காது. ஆனால், நாங்கள் மிகச் சிறப்பான தேர்தல் பணிகளை செய்கிறோம். எனினும், காங்கிரஸுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

அந்தச் சூழ்நிலையில், தேர்தலுக்குப் பின்பு கூட்டணியை ஏற்படுத்தி மத்தியில் ஆட்சி அமைக்க முயற்சிப்போம். தற்போதைக்கு 2 கூட்டணிகள்தான் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒன்று பாஜக.வுக்கு ஆதரவான கூட்டணி. இன்னொன்று பாஜக.வுக்கு எதிரான கூட்டணி. அந்த வகையில் பாஜக.வுக்கு ஆதரவான கூட்டணியின் எண்ணிக்கை மிகமிக குறைவு. அதேநேரத்தில் அந்தக் கட்சிக்கு எதிராக மொத்த அரசியல் கட்சிகளும் உள்ளதை பார்க்க முடிகிறது.

மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு எம்.பி.க்களின் எண்ணிக்கை கிடைக்கும் போது, ராகுல் காந்திதான் பிரதமர். இது வெளிப்படையாகத் தெரிந்த விஷயம்.

ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். இந்தத் திட்டம் புரட்சிகரமானது. இதனால் 5 கோடி குடும்பங்கள் வறுமை நிலையில் இருந்து முன்னேறும்.

அரசியல் காரணங்களுக்காக வருமான வரித் துறை போன்ற ஏஜென்சிகளை மத்திய அரசு ஏவி விடுகிறது. தனது தலைமையில் நாடு மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று மோடி கூறிவருகிறார். நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதல், கார்கில் போர் போன்றவை பாஜக ஆட்சியில்தான் நடந்தன. பொய் வாக்குறுதிகளை அளித்து நாட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி.

‘நல்ல நாள்’ வரும் என்று மோடி உறுதி அளித்தாரே? ரூ.15 லட்சம் தருவதாய் கூறினாரே? அந்த உறுதிமொழிகள் எல்லாம் என்னவாயிற்று? மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் 22 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும். ( கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் 3 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.)இவ்வாறு கமல்நாத் பேட்டியில் கூறினார்

'என் மகன் சட்டையை கிழித்தெறியுங்கள்'

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா தொகுதியில் முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல் முதல் முறையாக காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தனோரா பகுதியில் நேற்று கமல்நாத் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

சிந்த்வாரா தொகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக நான் நெருங்கிய தொடர்பு வைத் துள்ளேன். இப்போது இந்தத் தொகுதி மக்களின் வளர்ச்சிக்குப் பணியாற்றும் பொறுப்பை எனது மகன் நகுலிடம் ஒப்படைத்துள்ளேன். அவரை தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். சிந்த்வாரா தொகுதிக்குப் பணியாற்றும் வேலையை அவருக்குக் கொடுங்கள். வெற்றி பெற்ற பின்னர் அவர் தொகுதிக்கு வேலை செய்யவில்லை என்றால், அவரது சட்டையைக் கிழித்தெறியுங்கள்.இவ்வாறு கமல்நாத் கூறினார்.

சிந்த்வாரா தொகுதியில் 9 முறை எம்.பி.யானவர் கமல்நாத். தற்போது முதல்வர் பதவியேற்றதால், அந்தத் தொகுதியில் அவரது மகன் நகுல் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. மேலும், சிந்த்வாரா சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் கமல்நாத் போட்டியிடுகிறார். சிந்த்வாரா தொகுதியில் வரும் 29-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close