[X] Close

ஒடிசாவில் 3-ம் கட்ட தேர்தலில் 119 கோடீஸ்வரர்கள் போட்டி


3-119

  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 10:33 am
  • அ+ அ-

ஒடிசா மாநிலத்தில் 3-ம் கட்டமாக நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 119 பேர் கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது.

ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 3-ம் கட்டமாக 6 மக்களவை மற்றும் 42 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து, ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்:மக்களவைக்கு போட்டியிடும் 61 வேட்பாளர்களில் 16 பேரும் சட்டப்பேரவைக்கு போட்டியிடும் 356 வேட்பாளர்களில் 103 பேரும் தங்களுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக புரி மக்களவை தொகுதியில் பிஜு ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் பினாகி மிஸ்ராவுக்கு மட்டும் ரூ.117 கோடி மதிப்பிலான சொத்து இருப்பது தெரியவந்துள்ளது. பாஜக வேட்பாளர் நித்தேஷ் கங்கா தேவுக்கு (சம்பல்பூர்) ரூ.26 கோடியும் காங்கிரஸ் வேட்பாளர் காமாக்ய பிரசாத்துக்கு (தென்கனல்) ரூ.15 கோடியும் சொத்து இருக்கிறது. மக்களவை வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.87 கோடியாக உள்ளது.

சட்டப்பேரவை வேட்பாளர்களில் அதிகபட்சமாக, காங்கிரஸ் சார்பில் பாரம்பா தொகுதியில் போட்டியிடும் பாபி மொஹந்திக்கு ரூ.106 கோடியும், மாநில காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக்குக்கு (காசிபுரா) ரூ.60 கோடியும் சொத்து இருக்கிறது. கோடீஸ்வர வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.2.22 கோடி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close