[X] Close

பாக். மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்; தீபாவளிக்கு வெடிக்கவா அணு ஆயுதங்களை வைத்திருக்கிறோம்?- பிரதமர் மோடி கேள்வி


  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 09:41 am
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

பாகிஸ்தானின் மிரட்டலுக்கும், தீவிரவாத அச்சுறுத்தலுக்கும் ஒருபோதும் அஞ்சமாட்டோம், தீபாவளிக்கு வெடிக்கவா நாம் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறோம் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. முதல் இரு கட்டத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டன. முதல் கட்டத்தில் 91 தொகுதிகளுக்கும், 2-வதுகட்டத்தில் 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.

ராஜஸ்தானில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. 4-வது கட்டமான இம்மாதம் 29-ம் தேதி முதல்கட்டமும், மே 6ம்  தேதி நடக்கும் 5-ம் கட்டமும் வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்நிலையில் ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

தீவிரவாதிகளின் மனதிலும், உள்ளத்திலும் மிகப்பெரிய அச்சத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக்க கூட்டணி அரசு ஏற்படுத்தி இருக்கிறது. நமக்கு தொந்தரவு செய்யும் தீவிரவாதிகளை அவர்களின் இடத்துக்கே சென்று தாக்கி அழித்திருக்கிறோம். ஆதலால், பாகிஸ்தானின் எந்தவிதமான அச்சுறுத்தலுக்கும் இந்தியா இனிமேல் அஞ்சாது.

இந்தியாவை ஒருநேரத்தில் பாகிஸ்தான் அச்சுறுத்திவந்த காலம் இருந்தது. எங்களிடம் அணு ஆயுதம் இருக்கிறது, அணு ஆயுத பட்டனை அழுத்தி தாக்கிவிடுவோம் என்று கூறியது, இதையே பல்வேறு அதிகாரிகளும் அரசிடம் கூறி வந்தார்கள்.

நான் கேட்கிறேன், நம்மிடம் இப்போது என்ன இருக்கிறது, நம்மிடம் இருக்கும் அணு ஆயுதங்களை தீபாவளிக்கு வெடிக்கவா வைத்திருக்கிறோம்.

உலகத்தின் காலடியில் பாகிஸ்தானை நாங்கள் மன்றாட வைத்துள்ளோம். நான் செய்தது சரி என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால், காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் அது சரியல்ல என்று நினைக்கின்றன.

தீவிரவாதமும், தேசிய பாதுகாப்பும் தீவிரமாக ஆலோசிக்கும் அளவுக்கு பெரிய விஷயம் அல்ல என்று காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நினைக்கின்றன. பெருமைக்காகவும், வீரத்துக்காகவும் இதை மோடி பேசக்கூடாது என்று அந்த கட்சிகள் நினைக்கின்றன. ஏன் நான் இங்கு வந்து பஜனை பாடுவதற்காகவா வந்திருக்கிறேன்.

புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீர்ரகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களை நமது விமானப்படை தாக்கி அழித்தது. தீவிரவாதிகளின் முகாமுக்கே சென்று தாக்கினோம், ஆனால், அதற்குகூட காங்கிரஸ் கட்சி ஆதாரம் கேட்கிறது. நாம் தீவிரவாதிகளை தாக்கினோம், அந்த வலியை வேதனையை அவர்கள் உணர்ந்தார்கள்.

கடந்த 1971-ம் ஆண்டு போரின்போது நமக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. அப்போது நாம் பாகிஸ்தானின் கைப்பற்றிய நிலம், 90 ஆயிரம் வீரர்களை ஒப்படைத்தோம். அந்த நேரத்தில் நாம் காஷ்மீர் பிரச்சினையை பேசித் தீர்த்திருக்க வேண்டும். அந்த தருணத்தை காங்கிரஸ் தவறவிட்டு, உலகநாடுகளின் அழுத்தத்துக்கு பணிந்து, எந்த விஷயத்தையும் ஆலோசிக்கவில்லை. அங்கே மோடி இருந்திருந்தால், நிச்சயம் அந்த வாய்ப்பை நழுவவிட்டிருக்கமாட்டேன்.

அகஸ்டா வெட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் மைக்கோல் மாமா, நேர்மையானவர்களின் பணத்தை கொள்ளையடித்தார். ஆனால், நீங்கள் தேர்வு செய்த பெரும்பான்மை அரசாகிய நாங்கள், காங்கிரஸ் அரசின் ஒப்பந்தத்தையும், ஏஜென்டுகளையும் ரத்து செய்து, ரஃபேல் போர் விமானத்துக்கு புதிதாக ஒப்பந்தம் செய்தோம். விரைவில் ரஃபேல் விமானம் இந்தியாவுக்கு வரும்.

தேஜாஸ் விமானங்களை தயாரிக்கும் பணிகளை விரைவுப்படுத்தி இருக்கிறோம். நவீனரக துப்பாக்கிகளை தயாரித்து வருகிறோம், குண்டுதுளைக்காத கவசம் உடைக்காக காங்கிரஸ் அரசில் வீரர்கள் காத்திருந்தனர். இப்போது அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close