“வியப்பூட்டும் கூற்று” - மணிப்பூர் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் விமர்சனம்


கோப்புப்படம்

புதுடெல்லி: மணிப்பூர் குறித்து மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்துக்களை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. இன்னும் மணிப்பூருக்கு செல்லாத பிரதமரின் கூற்றுக்கள் வியப்பூட்டுகின்றன என்று விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு செயலாளரும், கட்சியின் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பல மாத முழுமையான மவுனத்துக்கு பின்னர் இன்று மாநிலங்களவையில், உயிரியில் ரீதியாக பிறக்காத பிரதமர், மணிப்பூரில் நிலைமை இயல்பாக இருப்பதாக வியப்பூட்டும் உண்மையை வெளிட்டுள்ளார்.

ஆனால் உண்மையில் இன்னர் மணிப்பூரைச் சேர்ந்த எம்.பி., மணிப்பூரில் நிலைமை இன்னும் பதற்றமாகவே இருக்கிறது என்று ஜூலை 1-ம் தேதி மக்களவையில் சுட்டிக்காட்டினார். கடந்த 2023, மே 23 அன்று மணிப்பூரில் கலவரம் வெடித்தில் இருந்து உயிரியல் ரீதியாக பிறப்பெடுக்காத பிரதமர் இன்னும் அங்குச் செல்லவில்லை. மாநிலத்தின் அரசியல் தலைவர்களைச் சந்திக்கவில்லை. குடியரசுத் தலைவரின் உரையும் இதுகுறித்து மவுனமே காத்தது" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி, "மணிப்பூரில் வன்முறை குறைந்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் பள்ளிகள் திறப்பட்டுள்ளன. மாநிலத்தில் அமைதி மற்றும் இயல்புநிலை திரும்புவதை தனது அரசு உறுதி செய்து வருகிறது" என்று தெரிவித்தார்.

மணிப்பூரில் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் தெரிவித்திருந்தார். என்றாலும், மணிப்பூரின் இரண்டாவது எம்.பி.,யை அரசு பேச விடவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இதனிடையே, ஜூலை 2ம் தேதி இன்னர் மணிப்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., "மோடி அரசின் மவுனம் அசாரணமானது மற்றும் நாட்டிற்கு மணிப்பூர் மக்கள் ஒரு பொரூட்டே இல்லை என்பதை உணர்த்துகிறது என்று தெரிவித்திருந்தார்.

அதேபோல், மணிப்பூர் சூழ்நிலையை பிரதமர் மோடி வேண்டுமென்றே புறக்கணிக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. நாடாளுமன்றத்தில் பிரதமர் பேசும் போது மணிப்பூர் குறித்து முழக்கங்கள் எழுப்பினர்.