[X] Close

பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டுபிடிக்க அனைத்து மாநிலங்களிலும் விரைவில் ‘சைபர்’ தடயவியல் ஆய்வகங்கள்: நிர்பயா நிதியம் மூலம் அமைக்க மத்திய அரசு திட்டம்


  • kamadenu
  • Posted: 21 Apr, 2019 10:08 am
  • அ+ அ-

பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டுபிடிக்க, அனைத்து மாநிலங்களிலும் விரைவில் சைபர் தடயவியல் ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

தேசிய குற்ற ஆவணப்பதிவு கழகத்தின் கணக்குப்படி கடந்த 2016-ம் ஆண்டு 12,187 சைபர் குற்றங்கள் பதிவாகி உள்ளன. அதற்கு முந்தைய 2015-ம் ஆண்டு 11,331 குற்றங்கள் பதிவாகி உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டை விட 2015-ம் ஆண்டு 20 சதவீதம் குற்ற வழக்குகள் அதிகரித்துள்ளது. அதேபோல் 2015-ம் ஆண்டை விட 2016-ம் ஆண்டு 6.3 சதவீத வழக்குகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து மாநிலங்களிலும் சைபர் தடயவியல் ஆய்வகங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் மரபணு சோதனை (டிஎன்ஏ) நடத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, உ.பி., தமிழ்நாடு, மேற்குவங்கம், ம.பி., இமாச்சல், காஷ்மீர், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், மிசோரம், மணிப்பூர், திரிபுரா, டெல்லி ஆகிய 13 மாநிலங்களில் ரூ.131.09 கோடியில் டிஎன்ஏ பரிசோதனை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க சைபர் தடயவியல் ஆய்வகங்கள், அதற்கான பயிற்சி வசதிகள் ரூ.223.19 கோடியில் ஏற்படுத்தப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அருணாச்சல், இமாச்சல், ம.பி., தெலங்கானா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே, சைபர் பயிற்சி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. மேலும், அரசு வழக்கறிஞர்கள், நீதித்துறை அதிகாரிகள் உட்பட 3,664 பேருக்கு சைபர் குற்றங்களை கண்டுபிடிப்பது தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.- பிடிஐ

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close