[X] Close

என் மனைவிக்கு துணை நிற்பது எனது கடமையல்லவா?- காங்கிரஸ் உட்கட்சி குமுறல்களுக்கு சத்ருஹன் சின்ஹா விளக்கம்


  • kamadenu
  • Posted: 20 Apr, 2019 15:35 pm
  • அ+ அ-

-ஏஎன்ஐ

காங்கிரஸ் கட்சியிலிருந்து கொண்டு மாற்று கட்சியின் வேட்பாளர் என்றுகூட பாராமல் மனைவி என்பதற்காக ஆதரிப்பதா? என சத்ருஹன் சின்ஹா மீது உட்கட்சிக் குமுறல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.

கணவர் காங்கிரஸ் கட்சியில், மனைவி சமாஜ்வாதி கட்சியில் என சத்ருஹன் சின்ஹாவும் பூனம் சின்ஹாவும் அரசியலில் பரபரப்பாகிவிட்டனர்.

பாஜகவில் இருந்து கொண்டே மோடி எதிர்ப்புப் பிரச்சார மேடைகளில் முழங்கியவர் சத்ருஹன் சின்ஹா. அதன் காரணமாகவே இந்த முறை அவருக்கு பாட்னா சாஹிப் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், காங்கிரஸில் இணைந்தார். அதே தொகுதியில் ரவிசங்கர் பிரசாதுக்கு எதிராகாப் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் நடிகர் சத்ருஹன் சின்ஹா அவரது மனைவிக்காக பிரச்சாரம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் குமுறல்கள் எழவே தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

அதில் அவர், "எனக்கும் என் குடும்பத்தாருக்கும் எனது நற்பாதியான என் மனைவிக்கும் நேற்றைய தினம் மிகவும் முக்கியமான சிறப்பான நாள். ஒரு கணவரின் கடமை தவறாமல் என் மனைவிக்கு நான் துணை நின்றேன். என் மனைவீ அவரது வாழ்வில் ஒருபுதிய அத்தியாயத்தைத் தொடங்கும்போது அவருக்கு நான் துணை நின்றேன். கட்சிகளின் எல்லை கடந்தது அந்தக் கடமை. ஆனால், எனது அரசியல் நிலைப்பாட்டில் நான் தெளிவாக உறுதியாக இருக்கிறேன்.

எனது இந்த செய்கைக்கு கலவையான விமர்சனங்கள் வந்ததை நானறிவேன். நான் ஒரு திரை நட்சத்திரம் என்பதால் அந்த அதிகாரப்போக்குடன் செயல்படுவதாக சிலர் கூறினார்கள். சிலர் நான் தவறேதும் செய்யவில்லை என்றனர்.

எதுவாக இருந்தாலும் சரி நான் ஏற்கெனவே சொன்னதுபோல் லக்னோ மக்களுக்காக துணை நிற்பேன். என்னை ஆதரித்த காங்கிரஸ் கட்சிக்கு எனக்கு சீட் கொடுத்த காந்தி குடும்பத்தினருக்கு நன்றி கூறுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

தன் மீதான குமுறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

மனைவிக்காக பேசியது என்ன?

காங்கிரஸ் கட்சியினரின் குமுறலுக்கு சத்ருஹன் சின்ஹா அவரது மனைவியை ஆதரித்துப் பேசியதே.

தனது மனைவி பூனம் சின்ஹாவுக்காக பிரச்சாரம் செய்த சத்ருஹன் சின்ஹா, "இதைப்போன்றதொரு பெருங்கூட்டத்தை நான் பார்த்ததே இல்லை. இது முலாயம் சிங் யாதவின் ஆசிர்வாதத்தாலும், மாயாவதியின் ஒத்துழைப்பாலும், ராஷ்ட்ரீய லோக் தல கட்சியின் அஜித் சிங்கின் கடின உழைப்பாலும் கிடைத்திருக்கிறது.

இந்த மெகா கூட்டணிக்கு இளைஞர்களின் சக்தி இருக்கிறது. அதற்கு அகிலேஷ் யாதவே உதாரணம். அவர் உ.பி.யின் இளம் முகமாக மட்டுமல்ல தேசத்தில் இளம் அடையாளமாகவும் இருக்கிறார்" எனப் பாராட்டிப் பேசினார்.

இது குறித்து லக்னோ தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் கிருஷ்ணம், "சத்ருஹன் சின்ஹா கணவராக தனது கடமையை முடித்துவிட்டார். இப்போது அவர் தான் சார்ந்த கட்சிக்காக பிரச்சாரம் செய்து அரசியல் தர்மத்தை கடைபிடிக்கட்டும்" எனக் கூறினார்.

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ்வாதி - ராஷ்ட்ரீய ஜனதா தலம் ஆகிய கட்சிகள் இணைந்து பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைத்துள்ளன. இதில் காங்கிரஸ் இடம்பெறாத நிலையில், மெகா கூட்டணியை சத்ருஹன் சின்ஹா பாராட்டிப் பேசியிருப்பது காங்கிரஸ் கட்சிக்குள் குமுறலை ஏற்படுத்தியிருக்கிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close