[X] Close

இந்து கலாச்சாரத்தை தீவிரவாதம் என்றவர்களுக்கான பதிலடி: சாத்வியை களமிறக்கியதற்கு நியாயம் கற்பிக்கும் பிரதமர் மோடி


  • kamadenu
  • Posted: 20 Apr, 2019 15:07 pm
  • அ+ அ-

இந்து கலாச்சாரத்தை தீவிரவாதம் என்றவர்களுக்கான பதிலடியாக சாத்வி பிரயாக்கை போபால் மக்களவை தொகுதிக்கான வேட்பாளராக களமிறக்கியுள்ளோம் எனக் கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளிவந்திருக்கும் சாத்வி பிரயாக் சிங் தாக்கூர் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலின் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் சாத்வியை எதிர்த்து காங்கிரஸ் தனது மூத்த தலைவர் திக் விஜய் சிங்கை களமிறக்கியுள்ளது.

சாத்வி பிரயாக்கை வேட்பாளராக நிறுத்திய பாஜகவை காங்கிரஸ் மட்டுமல்லாது பல்வேறு கட்சிகளும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பிரதமர் மோடி இந்த சர்ச்சை தொடர்பாக விளக்கமளித்திருக்கிறார். சாத்வியை வேட்பாளராக்கியதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் அவர் பேசியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில் பிரதமர் மோடி, "வளமையான இந்து கலாச்சாரத்தை தீவிரவாதம் என்று சாடியவர்களுக்கான பதில்தான் போபால் வேட்பாளர் சாத்வி பிரயாக். அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, ரே பரேலியில் போட்டியிடும் சோனியா காந்தி ஆகியோரும் ஜாமீனில் வெளிவந்தவர்களே. அவர்களைப் பார்த்துமட்டும் ஏன் எவருமே பிணையில் வந்தவர்களுக்கு போட்டியிட அனுமதி என்று வினவவில்லை?

ஆனால், ஒரு பெண், ஒரு சாது என்று பாராமல்கூட சாத்வி பிரயாக்கை மட்டும் ஜாமீனில் வந்தவர் வேட்பாளரா? என்று எள்ளி நகையாடுகின்றனர்.

சம்ஜுத்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, நீதிபதி பி.எச்.லோயா மரணம் ஆகியனவற்றுக்கு எதிராக காங்கிரஸ் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டது. சம்ஜூத்தா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததே? அது எப்படி இருந்தது?

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் 5000 ஆண்டுகள் பழமை கொண்ட வளமான இந்து கலாச்சாரத்தை, உலகமே முழங்கிய கலாச்சாரத்தை தீவிரவாத கலாச்சாரம் என்று எளிமையாக சொன்னீர்கள். அப்படிப் பேசியவர்களுக்கு சாத்வியை வேட்பாளராக நிறுத்தி பதில் சொல்லியிருக்கிறோம். இந்த பதிலுக்கு காங்கிரஸ் நிறைய விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

நான் குஜராத்தில் வாழ்ந்திருக்கிறேன். அங்கு காங்கிரஸ் அரசியல் செய்யும் விதத்தையும் பார்த்திருக்கிறேன். அவர்கள் சினிமாவுக்கு கதை எழுதுவது போல் அரசியல் செய்வார்கள். ஏதாவது ஒரு சர்ச்சையை தேர்வு செய்து கொள்வார்கள். பின்னர் அதற்கு ஒரு கதாநாயகனையும் வில்லனையும் அவர்களே உருவாக்குவார்கள்.

அவர்களின் இந்த சினிமா கதை பாணியால்தான் குஜராத்தில் நடந்த என்கவுன்ட்டர்  எல்லாமே போலியானவை என்று சித்தரிக்கப்பட்டது. நீதிபதி லோயா இயற்கை எய்தினார். ஆனால் காங்கிரஸின் கதை சொல்லும் திறனால் அது கொலையென புனையப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்தும் இப்படித்தான் போலி செய்திகள் வெளியிட்டனர்.

1984-ல் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் அவரது மகன் ராஜீவ் காந்தி, ஒரு பெரிய மரம் சாயும் போது பூமியில் அதிர்வுகள் ஏற்படும் என்றார். அதன் பின்னர் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் டெல்லியில் படுகொலை செய்யப்பட்டது. அது மக்கள் மீதான பயங்கரவாதம் இல்லையா?

ராஜீவ்காந்தி பிரதமரான பின்னர் நடுநிலையானவர்கள் என சொல்லிக் கொள்ளும் ஊடகங்கள் எல்லாம் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஆனால், இன்று போபால் வேட்பாளராக சாத்வி அறிவிக்கப்பட்ட பின்னர் எல்லோருமே கேள்வி கேட்கின்றனர்.

சீக்கிய கலவரத்தின் சாட்சியாக இருந்தவர்கள் எல்லோரும் பின்னாளில் அமைச்சர்களானார்கள். அதில் ஒருவர்தான் இப்போது மத்தியப் பிரதேச மாநில முதல்வராக இருக்கிறார். ம.பி. முதல்வர் கமல்நாத் மீது கூட புகார்கள் இருக்கின்றனர். அதைப் பற்றியெல்லம் யாராவது கேள்வி எழுப்பினார்களா? எங்களை மட்டும் கேள்வி கேட்க காங்கிரஸுக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா?" எனப் பேசியுள்ளார்.

சாத்வி பிரயாக் கடந்த புதன்கிழமையன்று பாஜகவில் இணைந்தார். கட்சியில் இணைந்தவுடனேயே அவர் வேட்பாளராக்கப்பட்டுவிட்டார். அடுத்த இரண்டே நாளில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி பிரச்சினையை கிளப்பினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close