உ.பி நெரிசல் பலி அதிகரிப்பு முதல் நீட் குறித்த விஜய் பேச்சு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> உ.பி. நெரிசல் சம்பவ பலி 134 ஆக அதிகரிப்பு: உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸ் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரிதுள்ளது. இந்தத் துயர நிகழ்வுக்கு காரணமான போலே பாபா தலைமறைவாகி உள்ளார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
நாட்டையே உலுக்கிய இத்துயரச் சம்பவம், உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ள ஹாத்ரஸ் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது. அங்குள்ள சிக்கந்தராராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது. இதை சாக்கார் நாராயண் சாகர் விஷ்வ ஹரி என்பவர் நடத்தி இருந்தார்.

> ஹத்ராஸ் நிகழ்விடத்தில் காவல் உயர் அதிகாரிகள் ஆய்வு: உத்தர பிரதேசத்தில் மத வழிபாட்டு கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 90 பெண்கள் உட்பட 130க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.இந்த நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்விடத்தில் புதன்கிழமை காலை மாநில காவல் உயர் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், போலே பாபா ஆசிரமத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனிடையே ஹாத்ரஸ் ஆன்மிக கூடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

> ஹாத்ரஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்: ஹாத்ரஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு மாநிலங்களவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. புதன் கிழமை காலை அவை கூடியதும் இரங்கல் குறிப்பை அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வாசித்தார். அதில் அவர், “உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாநட்டத்தில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். துரதிருஷ்டவசமான இந்த சம்பவம் மிகப் பெரிய துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு இதயப்பூர்வ இரங்கலை இந்த அவை தெரிவித்துக்கொள்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்துகிறது. இறந்தவர்களுக்காக ஒரு நிமிடம் எழுந்து நின்று நாம் அனைவரும் அஞ்சலி செலுத்துவோம்” என தெரிவித்தார்.

> “அவர்களால் உண்மைகளை சந்திக்க முடியாது” - பிரதமர் மோடி: மக்களவையில் செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி ஆற்றிய உரையில் எதிர்க்கட்சிகளைத் தாக்கிய நிலையில், இன்று மாநிலங்கள் அவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசினார். பிரதமர் மோடியின் உரைக்கு மத்தியில் எழுந்த எதிர்க்கட்சி எம்.பி.கள் மாநிலங்களவையை ஒத்திவைக்கவும், பொய் சொல்வதை நிறுத்தவும் என்று கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.கள், அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வெளிநடப்புக்கு இடையில் பேசிய பிரதமர் மோடி, "பொய்யைப் பரப்புபவர்களுக்கு உண்மையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லை என்பதை நாடே பார்த்துக்கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு உண்மையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லை. இந்த அவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்படும் பதில்களை கேட்கும் தைரியம் அவர்களுக்கு இல்லை. அவர்கள் மேலவையையும், அதன் பாரம்பரியத்தையும் அவமதிக்கிறார்கள்" என்றார்.

> அசாம் வெள்ளத்தால் 11.34 லட்சம் மக்கள் பாதிப்பு; 38 பேர் உயிரிழப்பு: அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை சுமார் 38 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மூன்று பேர் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனை அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்துள்ளது. அசாமில் செவ்வாய்க்கிழமை அன்று வெள்ளத்தின் நிலை தீவிரமடைந்தது. அங்கு 28 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 11.34 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

> ‘நீட் தேர்வு தேவையில்லை’ - தவெக தலைவர் விஜய் பேச்சு: “நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது. நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எனது கருத்து” என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடந்து வருகிறது. இரண்டாம் கட்டமாக சென்னை திருவான்மியூரில் புதன்கிழமை நடந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

> கல்லூரி சேர்க்கையில் பி.சி., எம்.பி.சி., மாணவர்களுக்கு அநீதி - ராமதாஸ்: கல்லூரி சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், சமூகநீதி சார்ந்த விவகாரங்களில் திமுக அரசு மயக்கம் கொள்ளாமல், தடுமாறாமல் செயல்பட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

> முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் சிறைத் தண்டனை ரத்து: பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

> சென்செக்ஸ் 80,000 புள்ளிகளை எட்டி சாதனை: இந்திய பங்குச் சந்தை புதன்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்றத்தில் உள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 80,013 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. 24,291 புள்ளிகளுடன் நிஃப்டி தொடங்கியது. சென்செக்ஸ் 80,000 புள்ளிகளை கடப்பது இதுவே முதல் முறையாகும். வங்கிகளின் பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் செலுத்தி வரும் ஆர்வம் மற்றும் சர்வதேச அளவில் நிலவி வரும் ட்ரெண்ட் போன்றவை இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

> ட்ரம்ப் உடனான விவாதம் குறித்து பைடன் விளக்கம்: அமெரிக்க அதிபர் தேர்தல் 2024-க்கான முதல் நேரடி விவாதத்தில் அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விவாதம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் பைடன் செயல்பட்ட விதம் விமர்சனத்துக்குள் ஆனது. இந்தச் சூழலில் அதற்கான விளக்கத்தை அவர் கொடுத்துள்ளார்.

முதல் விவாதத்தில் தனது செயல்பாடு குறித்து அதிபர் பைடன் விளக்கம் கொடுத்துள்ளார். “இது நான் கூறும் சாக்கு அல்ல. இது எனது விளக்கம். விவாதத்தில் நான் ஸ்மார்ட்டாக செயல்பட வில்லை. அதற்கு முதல் நாள் இரவு எனக்கு சரியான தூக்கம் இல்லை. விவாத நிகழ்வுக்கு முன்பாக உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது இதற்கு காரணம். நான் எனது ஊழியர்கள் சொன்னதை கேட்கவில்லை. அதோடு விவாத மேடையில் கிட்டத்தட்ட நான் தூங்கிவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.