[X] Close

தேர்தல் பிரச்சாரத்தில் ஹர்திக் படேலுக்கு கன்னத்தில் அறை


  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 12:54 pm
  • அ+ அ-

-ஏ.என்.ஐ.

குஜராத் மாநிலம், சுரேந்தர் நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் தலைவரும், பட்டிதார் சமூகத்தைச் சேர்ந்த தலைவருமான ஹர்திக் படேலை திடீரென ஒருவர் கன்னத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் அறைந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

படேல் சமூகத்தின் முக்கியத் தலைவரான ஹர்திக் படேல் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து படேல்சமூகத்துக்கு இடஓதுக்கீடு கேட்டு குஜராத்தில் பல போராட்டங்களை நடத்தினார், பலர் போராட்டத்தில் உயிரழந்தனர், ஹர்திக் படேலும் சிறையில் தள்ளப்பட்டார். இந்நிலையில், கடந்த மாதம் ஹர்திக் படேல் முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைந்து அந்த கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், சுரேந்திரநகர் மாவட்டத்தில் இன்று காலை ஹர்திக் படேல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார். இதற்காக ஹெலிகாப்டர் மூலம் செல்ல முடிவு செய்தார். ஆனால், ஹெலிகாப்டரை தரையிறங்கும் இடத்தில் உள்ள நிலத்தின் உரிமையாளர் அனுமதி தர மறுத்துவிட்டார்.

இதனால், லூனாவாடா நகருக்கு சாலை மார்க்கமாகச் சென்று அங்கிகருந்து பிரச்சாரம் நடக்கும் இடத்துக்கு வந்தார். இந்நிலையில், மேடையில் ஹர்திக் படேல் இன்று காலை பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ஹர்திக் படேலுக்கு சால்வை அணிக்கும் வகையில் ஒருவர் மேடை மீது ஏறி வந்தார். அவர் கையில் சால்வை இருந்ததால், ஹர்திக் படேலுக்கு வழங்கப் போகிறார் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருந்தனர்.

ஹர்திக் படேலுக்கு கன்னத்தில் பளார் 

யாரும் எதிர்பாராத நிலையில், திடீரென ஹர்திக் படேலின் கன்னத்தில் பளார் என அந்த மனிதர் அறைந்தார். அதுமட்டுமல்லாமல் ஹர்திக் படேலையும் தாக்கவும் செய்தார். இதைப் பார்த்த மேடையில் இருந்தவர்கள் அந்த மனிதரை பிடித்து இழுத்துச் சென்றனர்.  ஹர்திக் படேலை பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அதன்பின் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த மனிதர் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த தாக்குதல் குறித்து ஹர்திக்படேல் கூறுகையில், " பாஜக என்னை கொல்வதற்கு திட்டமிட்டுள்ளது. அதனால்தான் தொடர்ந்து என் மீது அடுக்கடுக்கான தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆனால், அனைத்துக்கும் அமைதியாக இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

ஹர்திக் படேல் மீது தாக்குதல் நடத்திய மனிதரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் யார் என்பது குறித்த விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close