[X] Close

ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு தூது அனுப்பினார் லாலு: பிஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி தகவல்


  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 10:56 am
  • அ+ அ-

மாட்டுத் தீவன ஊழல் வழக்கை நீர்த்துப் போகச் செய்ய உதவினால் பிஹாரில் பாஜக ஆட்சி அமைய ஆதரவு அளிக்கத் தயார் என்று லாலு பிரசாத் யாதவ் தூது அனுப்பியதாகவும் அதை நிராகரித்துவிட்டதாகவும் பாஜக மூத்த தலைவரும் பிஹார் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பிஹாரில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, 2015-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் லாலு தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை இணைந்து மெகா கூட்டணி அமைத்தன. இக்கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, நிதிஷ் குமார் முதல்வரானார். எனினும், லாலுவுடனான கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மெகா கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதிஷ் குமார், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து முதல்வரானார். இதனிடையே, மெகா கூட்டணியிலிருந்து வெளியேறி பாஜகவுக்கு ஆதரவளிக்க லாலு பிரசாத் யாதவ் முயற்சி செய்தது இப்போது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் பிஹார் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “மெகா கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, லாலுவின் தூதுவராக முன்னாள் மத்திய அமைச்சர் பிரேம் சந்த் குப்தா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை அணுகினார். அப்போது, லாலு மீதான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை சிபிஐ மூலம் நீர்த்து போகச் செய்தால் மெகா கூட்டணியிலிருந்து வெளியேறி, பாஜக தலைமையில் புதிய ஆட்சி அமைய லாலு தயாராக உள்ளார் என தெரிவித்தார். ஆனால் சிபிஐ நடவடிக்கையில் தலையிட முடியாது என ஜேட்லி மறுத்துவிட்டார்” என்றார். இந்த குற்றச்சாட்டை லாலுவின் மகனும் பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் மறுத்துள்ளார். வரும் தேர்தலில் பாஜக தோற்றுவிடும் என்ற அச்சத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மோடி கூறுகிறார் என தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close