[X] Close

கூகுள், ஆப்பிள் ப்ளே ஸ்டோரில் ‘டிக் டாக்’ செயலி நீக்கம்


  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 10:19 am
  • அ+ அ-

-ஆர்.பாலசரவணக்குமார்,

மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று கூகுள் மற்றும் ஆப்பிள் ப்ளே ஸ்டோரில் இருந்து சீன நிறுவனத்தின் ‘டிக் டாக்’ செயலி நேற்று முதல் இந்தியாவில் நீக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ‘டிக் டாக்’ செயலி தற்போது இளைஞர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது. இந்த ‘டிக் டாக்’ செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் புதிது, புதிதாக நகைச்சுவை, ஆட்டம் மற்றும் பொழுதுபோக்கு வீடியோக்களை உருவாக்கி அவற்றை பதிவிறக்கம் செய்யவோ அல்லது பதிவேற்றம் செய்யவோ முடியும் என்பதால் இந்த செயலிக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்தது.

கடந்த 2019 பிப்ரவரி கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மட்டும் சுமார் 240 மில்லியனுக்கும் அதிகமான முறை இந்தச் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 30 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்தச் செயலியைப் பயன்படுத்தி வருவதாகவும், இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 12 மடங்கு அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ‘டிக் டாக்’ செயலிக்கு இந்திய இளைஞர்கள் பலர் அடிமையாகி உள்ளனர். தற்போது குழந்தைகள் கூட இந்த ‘டிக் டாக்’ செயலியைப் பயன்படுத்துகின்றனர். இந்தச் சூழலில் ஆபாச வீடியோக்கள் மற்றும் பெண்களை மோசமாக சித்தரிக்கும் தரவுகளின் தளமாக இந்த ‘டிக் டாக்’ செயலி மாறி வருவதால் சமுதாயத்தில் ஒழுக்கக் கேடுகளுக்கும் காரணமாக உள்ளது. எனவே இந்த ‘டிக் டாக்’ செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை கடந்த ஏப்.3 அன்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, “குழந்தைகள் மற்றும் இளைய சமுதாயத்தினருக்கு எதிரான ‘சைபர் கிரைம்’ குற்றங்கள் அதிகரித்து வரும் காலகட்டத்தில் சமூக சீரழிவுக்கு காரணமாக உள்ள இந்த ‘டிக்-டாக்’ செயலியை அமெரிக்கா, இந்தோனேஷியா போன்ற மற்ற நாடுகளைப் போல இந்தியாவிலும் ஏன் தடை செய்யக்கூடாது என கேள்வி எழுப்பி, இந்த ‘டிக் டாக்’ செயலியை தடை செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ‘டிக் டாக்’ செயலி தரப்பில் ‘பைட்-டான்ஸ்’ நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தச் செயலியை தடை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விசாரணையை ஏப்.22-க்கு தள்ளி வைத்தது.

இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ள உத்தரவை மதித்து இந்த ‘டிக் டாக்’ செயலியை கூகுள் மற்றும் ஆப்பிள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்குமாறு மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சார்பில் அந்நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்படி இந்த ‘டிக் டாக்’ செயலி நேற்று முதல் (ஏப்.17) கூகுள் மற்றும் ஆப்பிள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கெனவே பதிவிறக்கம் செய்தவர்கள் இந்தச் செயலியை தடையின்றி பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close