"உ.பி.யின் 80 தொகுதிகளில் நாங்கள் வென்றாலும் இவிஎம்-களை நம்பமாட்டேன்” - அகிலேஷ் யாதவ்


புதுடெல்லி: "உத்தரப் பிரதேசத்திலுள்ள 80 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற்றால் கூட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்ப மாட்டேன்" என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "மக்களவைத் தேர்தல் சமயத்தில், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் அரசும், தேர்தல் ஆணையமும் ஒரு சிலருக்கு ஆதரவாக செயல்பட்டது. அது குறித்து விரிவாக இங்கு பேச நான் விரும்பவில்லை. அந்த அமைப்புகள் மீது இப்போது கேள்வி எழுந்துள்ளது.

நான் நேற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பவில்லை. இன்றும் நான் அதை நம்பவில்லை. உத்தரப் பிரதேசத்தின் 80 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெற்றாலும் இவிஎம்களை நான் நம்பமாட்டேன். இவிஎம் விவகாரம் இன்னும் முற்றுப்பெறவில்லை. சமாஜ்வாதி கட்சியினர் எங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.

‘இண்டியா’ கூட்டணி இந்தியாவுக்கு ஆதரவானது என்று ஒட்டுமொத்த நாடும் உணர்ந்துள்ளது. இந்தத் தேர்தல் இண்டியா கூட்டணிக்கான தார்மிக வெற்றி. இது நேர்மறை அரசியலுக்கான வெற்றி. இது சமூக நீதி இயக்கமான பிடிஏ-வுக்கான வெற்றி. 2024 தேர்தல் வெற்றியில் இண்டியா கூட்டணிக்கான பொறுப்பு அடங்கியுள்ளது.

ஜூன் 4, 2024 என்பது வகுப்புவாத அரசியலில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற நாள். இந்தத் தேர்தலில் வகுப்புவாத அரசியல் என்றென்றைக்குமாக தோற்றுவிட்டது. இந்தத் தேர்தல் நேர்மறை அரசியலுக்கான புதிய சகாப்தம், அரசியல் சாசனத்துக்கு ஆதரவான மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். அரசியலமைப்பு வென்றுள்ளது. இது மேல்மட்ட அரசியலுக்கான முடிவு. ராமர் நினைத்தது நடந்துள்ளது. ஃபைசாபாத்தில் பாஜக தோல்வியடைந்திருப்பது கூட ராமரின் விருப்பமாக இருக்கலாம்" என்று அகிலேஷ் பேசினார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் பேசும்போது, ஃபைசாபாத் எம்.பி.யும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான அவதேஷ் குமார் அருகில் அமர்ந்திருந்தார். இந்தப் பேச்சுக்கு பின்னர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, "தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமற்ற தன்மை பற்றி கேள்வி எழுப்பாமல் இருப்பது நல்லது" என்றார்.