[X] Close

48 மணிநேர பிரச்சாரத் தடை: மாயாவதி மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு


48

  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 14:00 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பிரச்சாரம் செய்ய 48 மணிநேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

உ.பி. முதல்வர் ஆதித்யநாத் சமீபத்தில் மீரட் நகரில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, இரு மதங்களுக்கு இடையே மோதல் உண்டாக்கும் வகையில் பேசியுள்ளார். மேலும், மாயாவதி தற்போது முஸ்லிம்கள் மீது அதிக அக்கறை காட்டுகிறார் என்று தெரிவித்தார்.

அதேபோல, தியோபந்த் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மாயாவதியும், மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசி, குறிப்பிட்ட கட்சியினருக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று கோரி இருந்தார். இரு தலைவர்களும் பேசிய வீடியோ ஆதாரம் தேர்தல் ஆணையத்திடம் அளித்து புகார் அளிக்கப்பட்டது.

இதேபோல சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் ஆசம்கான், நடிகையும், பாஜக வேட்பாளரான ஜெயப்பிரதா ஆடை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். அவரின் கருத்துக்கு தேசிய மகளிர் ஆணையமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது, தேர்தல் ஆணையத்திடமும் ஆசம்கான் பேச்சு குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உ.பி. முதல்வர் ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் ஆசம் கான் ஆகியோர் இன்று காலை முதல் 72 மணிநேரம் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதித்து தேர்தல் ஆணையம் நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

அதேபோல பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் இன்று காலை முதல் 48 மணிநேரம் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மாயாவதிக்கு விதிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் தடை உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இன்று மாயாவதி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மாயாவதி தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர், மாயாவதிக்கு விதிக்கப்பட்ட 48 மணிநேரத் தடைக்கு அதிருப்தி தெரிவித்தார்.

ஆனால், மாயாவதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு மறுத்துவிட்டது.

மாறாக, தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தனியாக ஒரு மனுத்தாக்கல் செய்யுங்கள் என்றும், தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர் பேசும் வெறுப்புணர்வுப் பேச்சுக்கு எதிராக தேர்தல் ஆணையம் தங்கள் உத்தரவால் விழித்துக்கொண்டது என்றும் நீதிபதிகள் தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close