[X] Close

நோயாளியின் உடல்நிலையை பரிசோதிக்க ஒரு இடத்தில் ரத்தம் எடுப்பீர்களா.. 20 இடத்தில் எடுப்பீர்களா?- தலைமை தேர்தல் ஆணையர் கேள்வி


20

  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 09:07 am
  • அ+ அ-

‘‘நோயாளிக்கு ரத்தப் பரிசோதனை செய்ய, ஒரு இடத்தில் ரத்தம் எடுப்பீர்களா, 20 இடத்தில் எடுப்பீர்களா?’’ என்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கேள்வி எழுப்பினார்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) முறைகேடுகள் நடப்பதாகவும், பழைய வாக்குச் சீட்டு முறையையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது, ஆந்திராவின் பல இடங்களில் இவிஎம் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தார். இந்தப் பின்னணியில் இவிஎம் இயந்திரங்கள் மீதான புகார் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய ஒப்புகை சீட்டும் வழங்கும் விவிபாட் இயந்திரங்கள் குறித்து அனைத்து விவரங்களையும் உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல்செய்தோம். அப்போது, வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடிக்கு பதில் தலா 5 வாக்குச் சாவடிகளில் பதிவாகும் வாக்குகளை விவிபாட் இயந்திரத்தின் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது போல் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், இவிஎம்இயந்திரங்களில் பதிவான வாக்குகளை விவிபாட் ஒப்புகை சீட்டுகளுடனும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவிஎம் இயந்திரங்கள் என்பது தேர்தல் ஆணையத்தின் கண்டுபிடிப்பு அல்ல. அவை 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளன. அதைத் தொடர்ந்து தற்போது விவிபாட் இயந்திரங்கள் வந்துள்ளன. அந்த இயந்திரங்களையும் தேர்தலில் பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அதை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. தற்போது, நோயாளிக்கு ரத்தப் பரிசோதனை செய்ய நீங்கள் விரும்பினால், அவரது உடலில் ஒரு இடத்தில் ரத்த மாதிரி எடுப்பீர்களா அல்லது 20 இடங்களில் எடுப்பீர்களா?இவிஎம் இயந்திரங்கள் முழுமையானவை. அவற்றில் முறைகேடுகள் செய்ய முடியாது. ஆனால், இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தேர்தல் பத்திரங்கள்

தேர்தல் பத்திரங்கள் விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீது நான் கருத்து சொல்ல முடியாது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்களின் விவரம் தெரிய வேண்டும் என்ற விஷயத்தில் தேர்தல் ஆணையம் உறுதியாக இருக்கிறது. அதை உச்ச நீதிமன்றத்திலும் வலியுறுத்தி இருக்கிறோம். தேர்தல் பத்திரங்கள் பிரச்சினையை மட்டுமல்ல, எங்கள் பணிகளை சத்தமில்லாமல் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறினார்.

‘பாஜக.வின் கிளைதான் தலைமை தேர்தல் ஆணையம்’ என்று விமர்சிக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு, ‘‘அதற்கான ஆதாரங்களை எந்த அரசியல் கட்சித் தலைவர் கொடுத்தாலும், அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்’’ என்று சுனில் அரோரா திட்டவட்டமாக தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close