[X] Close

பிரதமர் மோடியின் மக்களவைப் பிரச்சாரத்துக்கு பணம் எங்கிருந்து வருகிறது?- ராகுல் காந்தி கேள்வி


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 17:55 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

பிரதமர் மோடியின் மக்களவைப் பிரச்சாரத்துக்கு பணம் எங்கிருந்து வருகிறது, யார் தருகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரப் பிரதேசம் ஆக்ரா மாவட்டம், பதேபூர் சிக்ரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ் பாப்பரை ஆதரித்து ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இங்கு வரும் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

''நாட்டில் எங்கு பார்த்தாலும் நரேந்திர மோடி குறித்த விளம்பரமே இருக்கிறது. இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வருகிறது? தொலைக்காட்சியில் 30 வினாடிகள் விளம்பரத்துக்கும், நாளேடுகளில் விளம்பரம் செய்வதற்கும் லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும். இதற்கெல்லாம் யார் பணம் தருகிறார்கள். மோடியின் பாக்கெட்டில் இருந்து இதற்கு பணம் வரவில்லை.

பிரதமர் மோடி ஏழைகளிடம் இருந்து திருடி, வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிய நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி, லலித் மோடி, விஜய் மல்லையா ஆகியோருக்குக் கடன்  அளித்துள்ளார். இளைஞர்களுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதியளித்த மோடி, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் அதை நிறைவேற்றவில்லை.

ஆனால், நாங்கள் அவ்வாறு வாக்குறுதி அளிக்கவில்லை. சாத்தியமாகக்கூடிய வகையில், ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் தருவோம்.

நாங்கள் கொண்டுவரும் நியாய் திட்டம் ஏராளமான பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பொருளாதாரத்தை எந்த விதத்துலும் பாதிக்காத வகையில், ஏழைகளுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்ச ஊதியம் அளிக்கப்படும்.

நாங்கள் இந்த நியாய் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது, இதற்கு பணம் எங்கிருந்து வருகிறது என்று மோடி கேட்பார். நான் சொல்ல விரும்புவதெல்லாம், நாங்கள், நடுத்தர மக்களின் பாக்கெட்டில் இருந்து பணம் எடுக்க மாட்டோம். வருமானவரி உயர்வு ஏதும் இருக்காது. அனில் அம்பானி, மெகுல் சோக்ஸி, நிரவ் மோடி ஆகியோரின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுப்போம்.

மோடியின் ரூ.15 லட்சம் டெபாசிட் தரும் திட்டத்தில் யாரும் பயன்பெற்றிருக்க மாட்டார்கள். ஆனால், எங்களின் நியாய் திட்டத்தின் மூலம் நாட்டின் 20 சதவீத மக்கள் பயன் பெறுவார்கள்.

நாட்டில் 22 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமல் உள்ளன. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை நிலவுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் பஞ்சாயத்து அளவில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.

விவசாயிகள் இரவு பகலாக உழைக்கிறார்கள், பலனை வேறு சிலர் அனுபவித்துச் செல்கிறார்கள். பாஜகவினர் இரு இந்தியாவை உருவாக்க விரும்புவார்கள்.  ஒரு இந்தியா அனில் அம்பானிக்கானது, 2-வது இந்தியா சமானிய மக்கள் வாழ்வதற்கானது.

பணக்காரர்களுக்கு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டால் விவசாயிகளுக்கும் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். விவசாயிகள் கடனைக் கட்டாமல் சிறைக்கு அனுப்பப்பட்டால், அதேபோன்று பணக்காரர்களும் கடனைக் கட்டாமல் இருப்பதற்கு சிறைக்குச் செல்ல வேண்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் பயிர்ல் கடன் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்குத் தனியாக பட்ஜெட் உருவாக்கப்படும்''.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

‘காஞ்சனா 3’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close