சமாஜ்வாதி மூத்த தலைவர் வீட்டில் துப்பாக்கிச் சூடு: வாராணசியில் 6 பேர் படுகாயம்


வாரணசி: உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் விஜய் யாதவ் வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 வயது குழந்தை உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி, தஷாஷவ்மேத் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் யாதவ். சமாஜ்வாதி கட்சித் தலைவரான இவரது வீட்டில் நேற்று மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், விஜய் யாதவ் குடும்பத்தைச் சேர்ந்த நிர்பய் யாதவ் (6), கிரண் யாதவ், உமேஷ் யாதவ், தினேஷ் யாதவ் மற்றும் கோலு (எ) சுபம் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து விஜய் யாதவ் போலீஸில் புகார் அளித்தார். அதில், இந்த தாக்குதலானது, தனது முழு குடும்பத்தையும் கொல்லும் நோக்கம் கொண்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்ட நபர்களான அங்கித் யாதவ், ஷோபித் வர்மா, கோவிந்த் யாதவ், சாஹில் யாதவ் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, தஷாஷவ்மேத் காவல் நிலைய பொறுப்பாளரான எஸ்ஐ ராகேஷ் பாலை சஸ்பெண்ட் செய்து வாராணசி போலீஸ் கமிஷனர் மோஹித் அகர்வால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

குற்றவாளிகளைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீது உத்தரப் பிரதேச குண்டர்கள் மற்றும் சமூக விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துணை ஆணையர் பிரமோத் குமார் தெரிவித்துள்ளார்.