[X] Close

தேர்தல் அறிக்கை அல்ல; ‘உறுதிமொழி பத்திரம்’- புத்தம் புதிய வாக்குறுதிகளை தந்துள்ள பாஜக


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 08:45 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி 7 கட்டங்களாக நடக்கிறது. இதற்காக கடந்த திங்கட்கிழமை பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் பல புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன. முதலில் அதை ‘தேர்தல் அறிக்கை’ என்று கூறாமல், ‘சங்கல்ப் பத்ரா’ (உறுதிமொழி பத்திரம்) அல்லது ‘தீர்மான ஆவணம்’ என்று பாஜக கூறியது. இதன் சிறப்புகள் குறித்து மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விரிவாக எடுத்துரைத்தார்.

தேர்தல் அறிக்கை என்றால், அடுத்த 5 ஆண்டுகளுக்கானது. அதுபோல்தான் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடும். ஆனால், பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள பெரும்பாலான உறுதிமொழிகள் 2022-ம் ஆண்டு வரைக்கானது. அந்த ஆண்டுதான் இந்தியா தனது 75-வது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. 2019-க்குப் பிறகு அடுத்த மக்களவைத் தேர்தல் 2024-ம் ஆண்டுதான் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாஜக.வின் தேர்தல் அறிக்கையில், 75-வது ஆண்டு சுதந்திர விழாவை முன்னிட்டு 75 இலக்குகளும் இடம்பெற்றுள்ளன. தேர்தல் அறிக்கையை இணைத்து பிரதமர் நரேந்திர மோடி 130 கோடி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி பார்த்தால் பாஜக.வின் அறிக்கை 2047-வது ஆண்டு வரை நீள்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவை கொண்டாடப்படும் வரை பாஜக அறிக்கை உள்ளது.

மோடி கூறும்போது, ‘‘வரும் 2047-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டை நிறைவு செய்கிறது. அப்போது நாடு எப்படி இருக்க வேண்டும் என்று நாம் இணைந்து கற்பனை செய்வோம். 2047-ம் ஆண்டுக்கான அடித்தளமாக அடுத்த 5 ஆண்டுகளை மாற்றி அமைக்க பாஜக உறுதிபூண்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.

தவிர புதிதாக பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்:

வழக்கமாக பாஜக.வின் ஒவ்வொரு அறிக்கையிலும் ராமர் கோயில் கட்டுவோம் என்பது இடம்பெறும். தற்போது சபரிமலை விவகாரமும் சேர்க்கப்பட்டுள்ளது. சபரிமலை தொடர்பான மக்களின் நம்பிக்கை, பாரம்பரியம், வழிபாட்டு சடங்குகளை உறுதி செய்வதற்கு பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் கணிசமான வாக்குகளைப் பெறலாம் என்று பாஜக நம்புகிறது.

இதேபோல் குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீரில் நிரந்தர குடியுரிமை மற்றும் சொத்துகள் வாங்க கட்டுப்பாடு விதிக்கும் 35ஏ சட்டப்பிரிவை ரத்து செய்வது, 60 வயதான சிறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது, மீனவர்களுக்குத் தனித் துறை உருவாக்குதல், 2024-ம் ஆண்டுக்குள் குழாய் மூலம் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் விநியோகம், தண்ணீர் மேலாண்மைக்கு தனி அமைச்சகம், பாசனம் மற்றும் குடிநீர் பிரச்சினைகளைத் தீர்க்க நதிகள் இணைப்பு, 2030-ம் ஆண்டுக்குள் உலகின் பொருளாதாரத்தில் 3-வது பெரிய நாடாக இந்தியாவை உருவாக்குவது, வறுமை கோட்டுக்குக் கீழுள்ளவர்களின் சதவீதத்தை ஒற்றை இலக்கத்துக்குள் குறைப்பது என அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் புதிதாக கூறப்பட்டுள்ளன.

மேலும் 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி, 2022-ம் ஆண்டுக்குள் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது, கங்கை நதியை முழு வதுமாக தூய்மைப்படுத்துவது, 2024-ம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வேயை முற்றிலும் மின்மயமாக்குவது, 60 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைப்பது, 100 புதிய விமான நிலையங்கள், 400 அதிநவீன ரயில் நிலையங்கள் உருவாக்குதல், உள்கட்டமைப்புக்கு 100 லட்சம் கோடி முதலீடு செய்வது உட்பட பல புதிய வாக்குறுதிகளை பாஜக வழங்கி உள்ளது.

மேலும், வெளியுறவுத் துறை தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக இந்தப் பிராந்தியத்திலேயே முதல் முறையாக ‘வெளியுறவுக் கொள்கை பல்கலைக்கழகம்’ தொடங்கப்படும் என்று பாஜக கூறியுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close