[X] Close

நாகப் பாம்புக்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சை.. அன்பின் உச்சம்!


snake-gets-spine-back-thanks-to-surgeon

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 May, 2018 13:14 pm
  • அ+ அ-

ஒவ்வோர் ஆண்டும் இங்கு இந்தியாவில்தான் நாகப்பாம்பு தீண்டி உயிரிழிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆனால், இதே தேசத்தில்தான் நாகப்பாம்பைக் காப்பாற்றி மீண்டும் கானகத்திலேயே விடும் அன்பர்களும் அதிகமாக இருக்கின்றனர்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஜனகரெட்டிகுட்டம் பகுதியில் அடிபட்ட பாம்புக்கு அறுவை சிகிச்சை செய்த சம்பவம் நடந்துள்ளது. விஷ ஜந்து என்று பார்க்காமல் அதன் உயிரைக் காப்பாற்றிய செயல் அன்பின் உச்சம் என்றால் அது மிகையல்ல.

Snake Saver Society (SSS) பாம்புகள் பாதுகாப்பு சமூகம் என்ற அமைப்பு ஒன்று இருக்கிறது. இந்த அமைப்பின் நிறுவனர் சட்டாலவாடா கிராந்திக்கு ஞாயிறு இரவு ஓர் அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய பிரம்மானந்த ராவ் என்பவர் தனது வீட்டின் படுக்கை அறையினுள் நாகப்பாம்பு ஒன்று நுழைந்துவிட்டது என்றார். உடனடியாக அங்கு இருசக்கர வாகனத்தில் விரைந்தார் கிராந்தி. ஆனால், கிராந்தி செல்லும்போதே இன்னொரு அழைப்பும் வந்தது. பாம்பை கண்டுபிடித்து பயங்கரமாக தாக்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் அங்கு விரைந்தார் கிராந்தி.

அங்கே பாம்பு முதுகெலும்பு உடைந்த நிலையில், குடல் வெளியில் சரிந்த நிலையில் பரிதாபமாகக் கிடந்துள்ளது. பாம்பை மீட்ட கிராந்தி அதற்கு தனது வீட்டிலேயே முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்திருக்கிறார்.

மறுநாள் காலை பார்த்தபோது பாம்பு அப்போதும் உயிருடன் இருக்கவே அதனை எடுத்துக் கொண்டு மொட்டூரி ராம கோட்டேஸ்வர ராவ் என்ற பிராணிகள் மருத்துவரிடம் எடுத்துச் சென்றுள்ளார். சுமார் 1 மணி நேரம் ராவ், அந்த பாம்ப்புக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். குடலை உள்ளே வைத்து தைத்ததுடன், பாம்பின் நொறுங்கிய முதுகெலும்பை சேர்த்துவைத்துத் தைத்துள்ளார். தற்போது பாம்பு கிராந்தியின் பராமரிப்பில் இருக்கிறது.

பாம்புகள் குறித்து கிராந்தி கூறும்போது, "நான் சிறுவயதில் எறுமை மாடு மேய்ப்பதற்காகச் செல்லும்போது நிறைய பாம்புகளைப் பார்த்திருக்கிறேன். ஒருகட்டத்தில் அவற்றுடன் நான் விளையாடினேன். பின்னர், வாழ்வாதாரத்துக்காக அவற்றைப் பிடிக்க ஆரம்பித்தேன். எங்கள் பகுதிகளில் வீடுகளுக்குள் புகும் நாகங்கள், விரியன்களை பிடித்து மீண்டும் அவற்றைக் காட்டில் சென்றுவிடுவேன். முன்பெல்லாம் பாம்பை கண்டவுடன் அடித்துக் கொல்பவர்கள் இப்போது பெரும்பாலானோர் பாம்பைக் கண்டவுடன் எனக்கு போன் செய்கிறார்கள்" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close