[X] Close

போலி செய்திகளைத் தடுக்க தயாராகும் பேஸ்புக் நிறுவனம்- 30 ஆயிரம் பேரை உள்ளடக்கிய 40 குழுக்கள் தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளன


30-40

  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 09:40 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலையொட்டி போலி செய்திகளைத் தடுப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் தயாராகியுள்ளது. இதற்காக 30 ஆயிரம் பேரை உள்ளடக்கிய 40 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளமாக பேஸ்புக் உள்ளது. சுமார் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த பேஸ்புக்கைப் பயன்படுத்தி வருகின்றனர். குடும்ப நிகழ்ச்சிகளின் வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்வது, செய்திகளைப் பகிர்வது என ஏராளமான பேர் இதை பயன்படுத்தி வருகின்றனர். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இதை பயன்படுத்தி வருவதால் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளமாக இது உள்ளது.

உடனுக்குடன் படம் எடுத்து அதை பேஸ்புக் பக்கத்தில் பதிவிடுவதை இளைஞர்கள் அதிக அளவில் செய்து வருவதால் குறுகிய காலத்தில் பேஸ்புக் வலைத்தளம் பிரபலமடைந்தது. குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளில் இதன் வளர்ச்சி அபரிமிதமானதாக உள்ளது.

இதனிடையே 2 மாதங்களுக்கு முன்பு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம்வெளியிட்ட தகவல்களால் பேஸ்புக் நிறுவனத்துக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டது. இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற அரசியல் தகவல் ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அமெரிக்கத் அதிபர் தேர்தலில் பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் முடிவுகள் மாற பெரிதும் துணை புரிந்ததாக புகார் எழுந்தது.

இது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து, கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டதில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ள அதன் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் அதற்காக மன்னிப்பு கோரினார்.

தற்போது மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கேம்ப்ரிட்ஜ் அனலிடிக்கா சர்ச்சை எதிரொலியால் உஷாரான பேஸ்புக் நிறுவனம் அரசியல் விளம்பரங்களுக்கு பல்வேறு கெடுபிடிகளையும் விதித்திருக்கிறது. இதனிடையே பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் இந்தியாவில் ஏராளமான போலிச் செய்திகள் உலா வருவதாக புகார் எழுந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் நேரத்தில் இதுபோன்ற போலியான செய்திகள் அதிக அளவில் பேஸ்புக்கில் பதிவேற்றப்படுவதும், அதை பலர் பலருக்கு பகிர்வதும் அதிகரித்து வருகிறது. வெற்றுச் செய்திகள், வெறுக்கத்தக்க பேச்சுக்கள், போலியான செய்திகள், வீடியோக்கள், ஆடியோக்கள் போன்றவை அதிகரித்து வருவதாக கடும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பேஸ்புக்கில் பொய்யான தகவல்கள், போலி செய்திகளைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் முழுமையான அளவில் தயாராகியுள்ளது.

இதற்காக 40 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர பணிகளில் அக்குழு உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தக் குழுக்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள மென்லோ பார்க், டப்ளின்,சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் பேஸ்புக் நிறுவன அலுவலகங்களில் இருந்து செயல்பட்டு வருகின்றன. பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்படும் வீடியோக்கள், ஆடியோக்கள், செய்திகளை இந்தக் குழுக்கள் ஆய்வு செய்த பின்னர் பதிவேற்றும்.

இந்த 40 குழுக்களில் மொத்தம் 30 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இதனால் பேஸ்புக் பக்கத்தில் பொய்யான செய்திகள், போலியான தகவல்கள் இடம்பெறுவது பெரும்பாலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 24 மணி நேரமும் செய்திகள், வீடியோ, ஆடியோக்களை கண்காணிக்கும் பணிகளில் இந்த குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.

இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்தின் பொறியியல் மேலாளர் (குடிமையியல் ஒருமைப்பாடு) கவுஷிக் ஐயர் கூறும்போது, “இந்தக் குழுக்கள் 24 மணி நேரமும் தீவிரமாக பணியாற்றி செய்திகள்,படங்கள், வீடியோக்கள், ஆடியோக்களை ஆய்வு செய்கின்றன. அவ்வாறு வரும் பதிவுகளில் தேர்தல் விதிமுறை மீறல் இருப்பது தெரியவந்தால் அது நிறுத்தப்படும்.

எந்தச் செய்திகள் ஏற்புடையதாக உள்ளதோ அவை மட்டுமே பதிவேற்றப்படும். இந்தியாவில் மாற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை கையாள்வதுதான் எங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது” என்றார்.

பேஸ்புக் நிறுவன ஊழியர் ரீட்டாஅக்குய்னோ கூறும்போது, “தேர்தலின்போது பேஸ்புக் பக்கங்களை சிலர் தவறான காரியத்துக்காக பயன்படுத்துகிறார்கள். தற்போது தவறான செய்திகள், பொய்யான தகவல்கள் வந்தால் அவற்றை பல கட்டங்களில் தடுத்து நிறுவனதற்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.

இதற்காக கடந்த 18 மாதங்களாக பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை நிறுவனத்தில் உருவாக்கியுள்ளோம். ஒரு சமுதாயத்துக்கு எதிராகவோ அல்லதுஅதை இழிவுபடுத்தும் வகையிலோ செய்திகள் இருந்தால் அது நிறுத்தப்படும்” என்றார்.

பேஸ்புக் நிறுவனத்தின் பொதுமக்கள் கொள்கை இயக்குநர் (உலக அளவிலான தேர்தல் பிரிவு) கேட்டி ஹர்பத் கூறும்போது, “முதலில் போலியான பேஸ்புக் கணக்குகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். போலி கணக்குகளை கையாள 5 முக்கிய சோதனைகளை உருவாக்கியுள்ளோம்.

இதற்குப் பிறகு ஏராளமான போலி கணக்குகள் கண்டறியப்பட்டன. தானாகவே போலி செய்திகளைத் தடுக்கும் வகையில் வசதி, போலி செய்திகளைக் கண்டறிந்து அதைக் குறைக்கவசதி போன்றவை இந்த புதிய தொழில்நுட்ப வசதியின் சிறப்பம்சங்களாகும். நடந்து முடிந்த பிரேசில், அமெரிக்கத் தேர்தலுக்காக பல்வேறு வசதிகளை உருவாக்கினோம். அது தற்போது இந்தியத் தேர்தலுக்கும் உதவி வருகிறது” என்றார்.

இதனிடையே தீங்கு விளைவிக்கும் செய்திகள், தேர்தல் ஒருமைப்பாடு, தனியுரிமை மற்றும் செய்தியை எடுத்துச்செல்லும் திறன் போன்ற துறைகளை கையாள சட்டம் கொண்டு வரவேண்டும் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார். அப்படி ஒரு சட்டம் இருந்தால் போலி செய்திகளை முழுமையாக தடுப்பது எளிது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close