[X] Close

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்: பேஸ்புக் விளம்பரத்தில் பாஜக முதலிடம்


  • kamadenu
  • Posted: 08 Apr, 2019 06:32 am
  • அ+ அ-

தேர்தல் விளம்பரங்கள் தற்போது சமூக வலைதளத்தில் குவிந்து வருகின்றன. பேஸ்புக் சமூக வலைதளத்தில் செய்யப்பட்ட விளம்பரங்களில் பாஜக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்களில் விளம்பரங்களைச் செய்து வருகின்றன.

இந்த நிலையில் பேஸ்புக் சமூக வலைதளத்தில் இதுவரை ரூ.10 கோடிக்கும் அதிகமாக தேர்தல் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவில 20 கோடிக்கும் அதிகமான மக்கள் பேஸ்புக் பக்கத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே அதை குறிவைத்து அரசியல் கட்சிகள் தங்களது விளம்பரங்களை பேஸ்புக் சமூக வலைதளத்தில் தந்து வருகின்றன.

மார்ச் 23-ம் தேதி வரை 41,974 விளம்பரங்கள் பேஸ்புக்கில் வந்துள்ளன. இதற்காக ரூ.8.58 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. மார்ச் முடிவில் இது ரூ.10 கோடியைத் தாண்டிவிட்டது.

மார்ச் முடிவில் 51,810 விளம்பரங்கள் தரப்பட்டு ரூ.10.32 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்ச விளம்பரங்களை தந்து பாஜக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பாஜக சார்பில் ‘பாரத் கே மன் கீ பாத்’ என்ற பேஸ்புக் பக்கத்தின் கீழ் 3,700 விளம்பரங்கள் தரப்பட்டுள்ளன. இதற்காக ரூ.2.23 கோடி செலவிடப்பட்டுள்ளது.

‘மை ஃபர்ஸ்ட் வோட் ஃபார் மோடி’, ‘நேஷன் வித் நமோ’ என்ற பாஜக பக்கங்களில் தரப்பட்டுள்ள விளம்பரங்களுக்காக ரூ.36.2 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. பாஜக சார்பில் பல்வேறு பக்கங்கள் உருவாக்கப்பட்டு அதில் விளம்பரங்கள் இடப்படுகின்றன. இதற்காக கோடிக்கணக்கில் செலவழிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் சார்பில் ரூ.5.91 லட்சமும், பிஜு ஜனதா தளம் சார்பில் ரூ.8.56 லட்சமும், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ரூ.1.58 லட்சமும், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.58,355-ம் பேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் செய்ய செலவழிக்கப்பட்டுள்ளன.

இதைப் போலவே ட்விட்டர், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களிலும் கூகுள் இணையதளத்திலும் ஆன்-லைன் விளம்பரங்கள் தரப்பட்டு வருகின்றன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close