[X] Close

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த வழக்கு: யார் பெயரையும் குறிப்பிடவில்லை- கிறிஸ்டியன் மைக்கேல்


  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 19:59 pm
  • அ+ அ-

-பிடிஐ

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவிஐபி ஹெலிகாப்டர் முறைகேடு வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், ஏப்ரல் 5ம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் இது தொடர்பாக நான் ஒருவர் பெயரையும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்துள்ளார். அதாவது அமலாக்கப்பிரிவினரின் விசாரணையின் போது இந்த ஒப்பந்தம் தொடர்புடைய ஒருவர் பெயரைக் கூடத் தான் தெரிவிக்கவில்லை என்றார்.

 

மேலும் மத்திய அரசு அரசியல் லாபங்களுக்காக மத்திய அரசு தங்கள் விசாரணை முகமைகளைப் பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டிய கிறிஸ்டியன் மைக்கேல், இது தொடர்பாக அமலாக்கபிரிவு தன் குற்றப்பத்திரிகையில் இந்த ஒப்பந்தத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசியல்வாதிகள், பாதுகாப்பு அதிகாரி, ஆட்சியதிகாரிகள், மற்றும் பத்திரிகையாளர்கள் பெயர்களைக் குறிப்பிட்டதாக எழுந்த செய்திகளை அடுத்து மனு ஒன்றைச் செய்திருந்தார்.

 

இன்று, கிறிஸ்டியன் மைக்கேலின் இந்த மனுவுடன் அவரது வழக்கறிஞர் சிறப்பு நீதிபதி அர்விந்த் குமார் முன்னிலையில் ஆஜரானார். அப்போது நீதிபதி அமலாக்கத்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பி ஏப்ரல் 6ம் தேதிக்குள் பதிலளிக்கக் கோரியுள்ளது.

 

மைக்கேலின் வழக்கறிஞர் அல்ஜோ கே.ஜோசப், “மீடியாக்களுக்கு கசிந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போல் கிறிஸ்டியன் மைக்கேல் யார் பெயரையும் விசாரணை முகமையின் முன் கூறவில்லை. இது என் கட்சிக்காரருக்கு எதிரான ஒரு பரபரப்பையும் முன் அனுமானங்களையும் ஏற்படுத்தியது” என்று வாதாடினார்.

 

மேலும் அந்தக் குற்றப்பத்திரிகையின் நகல் மைக்கேலுக்கு கொடுக்கப்படும் முன்பே மீடியாக்களுக்கு அளிக்கப்பட்டது. கோர்ட் பார்வைக்கு வருவதற்கு முன்பே அது எப்படி மீடியாக்களுக்கு கசிந்தது என்று தன் கட்சிக்காரர் கேள்வி எழுப்பியதாக கோர்ட்டில் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

 

ஆகவே, “கோர்ட் இதில் சமச்சீர் தன்மையை உறுதி செய்ய வேண்டும். சுதந்திரமான, நியாயமான விசாரணைக்காக இங்கு கோர்ட் ஊடக சுதந்திரத்தைக் கொஞ்சம் கட்டுப்படுத்தலாம்” என்றார்.

 

குற்றப்பத்திரிகையை அமலாக்கப்பிரிவு கோர்ட்டில் தாக்கல் செய்யும் போது குற்றம்சாட்டப்பட்டவர் சார்பான வழக்கறிஞர்கள் அதன் நகல்களை கேட்ட போது அமலாக்கத் துறை இன்னும் கோர்ட் கவனத்துக்கே அது கொண்டு செல்லப்படவில்லை எப்படி கொடுக்க முடியும் என்று ஆட்சேபம் தெரிவித்தனர்.

 

ஆனால் மீடியாக்களுக்கு அதன் நகல்கள் போய் விஷயம் பரபரப்புக்குள்ளானது. கோர்ட் கவனத்துக்கு வருவதற்கு முன்பே மீடியாக்களுக்குச் செல்கிறது, ஆனால் குற்றம்சாட்டப்பட்டவருக்கு நகல்கள் அளிக்கப்படவில்லை என்று கிறிஸ்டியன் மைக்கேல் மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும், “அமலாக்கத்துறையினர் நீதிபரிபாலன முறையையே கிண்டல் செய்கிறது. அரசியல் குற்றங்களில் ஈடுபடுவோரை நாடு கடத்தக் கூடாது என்று நாடுகடத்தல் ஒப்பந்தம் கூறுகிறது, ஆனால் இங்கு என்னவென்றால் அரசே விசாரணை முகமையை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறது. குற்றப்பத்திரிகையை முதலில் மீடியாக்களுக்கு கொடுத்தது இதற்கு நல்ல உதாரணமாக உள்ளது. எனவே விசாரணை முகமையின் செயல் சட்ட நடைமுறைகளை மீறுவதாக உள்ளது. விசாரணை முகமை அரசின் ஆயுதமாக செயல்படுகிறது என்பதை இது எடுத்துரைக்கிறது.” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

ஏப்ரல் 4ம் தேதி கோர்ட்டில் அமலாக்கத்துறை கூறும்போது மைக்கேல் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த ஒப்பந்தம் மூலம் 42 மில்லியன் யூரோக்கள் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close