மோடி 73 முறை, ராகுல் 6 முறை... - காங்கிரஸை கொந்தளிக்க வைத்த சன்சத் டிவி ஒளிபரப்பு!


புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றியபோது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைக் காட்டிலும் பிரதமர் மோடி மிக அதிகமான முறையில் திரையில் காட்டப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், "51 நிமிடம் நிகழ்ந்த குடியரசுத் தலைவரின் உரையின் போது யார் எவ்வளவு நேரம் திரையில் காட்டப்பட்டனர்? பிரதமர் நரேந்திர மோடி: 73 முறை; மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி: 6 முறை; ஆளுங்கட்சியினர்: 108 முறை; எதிர்க்கட்சியினர்: 18 முறை. சன்சத் தொலைக்காட்சி என்பது நாடாளுமன்ற நடைமுறைகளை ஒளிபரப்புவதற்கானது. மாறாக கேமராஜீவியின் நாசிசத்துக்கானது இல்லை". என்று சாடியுள்ளார்.

முன்னதாக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 18-வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கூட்டுக் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். தனது உரையில் குடியரசுத் தலைவர் எமர்ஜென்சி குறித்து சாடினார். அவர் கூறுகையில், "975 ஜூன் 25 அன்று இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை பிரகடனம் (எமர்ஜென்சி) அரசியல் சாசனத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். அதைத் திணித்ததும் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஆனால் அத்தகைய சக்திகளுக்கு எதிராக நாடு வெற்றி கண்டது. இந்திய அரசியலமைப்பை வெறும் நிர்வாக ஊடகமாக மாற்ற முடியாது.

அரசியலமைப்புச் சட்டத்தை, பொது உணர்வின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதனடிப்படையில், நவம்பர் 26ஆம் தேதியை அரசியலமைப்பு தினமாக இந்த அரசு கொண்டாடத் தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது அங்கு 370வது சட்டப்பிரிவு காரணமாக நிலைமை வேறுபட்டது” என்று தெரிவித்தார்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு பதில் அளித்து தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள பதிவில், "மோடி அரசால் எழுதப்பட்டுள்ள குடியரசுத் தலைவரின் உரையினைக் கேட்கும்போது, மோடி நிரந்தரமான மறுப்பு மனநிலையில் இருப்பதாக தெரிகிறது. தேர்தல் முடிவு அவருக்கு எதிராக இருந்தது. ஏனென்றால் அவர்களின் 400+ என்ற முழக்கத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். பாஜகவுக்கு 272 என்ற பெரும்பான்மையை மக்கள் தரவில்லை. மோடியால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் அவர் எதுவும் மாறவில்லை என்று பாசாங்கு செய்கிறார். ஆனால் நாட்டு மக்கள் மாற்றத்தைக் கேட்டுள்ளனர் என்பதே உண்மை" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்யின் தாரிக் அன்வர் கூறுகையில், "பழைய உரையில் அவர்கள் சில மாற்றங்களை செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் இன்று ஆற்றிய உரையில் புதிதாக எதுவும் இல்லை. எமர்ஜென்சிக்கு பின்னர் பாஜக தோல்வியடைந்த பல தேர்தல்கள் நடந்து விட்டன. புதிதாக சொல்ல அவர்களிடம் எதுவும் இல்லை" என்று தெரிவித்தார்.