மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை ராகுல் காந்தி சந்தித்தன் பின்புலம்


புது டெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று சந்தித்து பேசினார். அப்போது, அவசரநிலை குறித்து மக்களவையில் சபாநாயகர் கூறிய கருத்தை தவிர்த்திருக்கலாம் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

மக்களவை சபாநாயகராக நேற்று ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனம் அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என ஒரு தீர்மானத்தை வாசித்தது மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடையே புயலை கிளப்பியது.

1975ம் ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று காங்கிரஸ் அரசு எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்து, ஊடகங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது, நீதித்துறையின் சுயாட்சியையும் கட்டுப்படுத்திது என நெருக்கடி நிலையின் கொடூரமான தன்மையை நாடு எதிர்கொண்டது என சபாநாயகர் ஓம்பிர்லா நினைவு கூர்ந்தார்.

இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை நடவடிக்கைகளை சபாநாயகர் ஒத்திவைத்தார். இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்துப் பேசியதாகவும், அப்போது, அவசர நிலை குறித்து தெரிவித்த கருத்துகளை தவிர்த்திருக்கலாம் என ராகுல் காந்தி கூறியதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. சபாநாயகர், ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்தார். அதன் பிறகு அவரும், இந்தியா கூட்டணி கட்சிகளின் மற்ற தலைவர்களும் சபாநாயகரை சந்தித்தனர்.

நாடாளுமன்ற செயல்பாடு குறித்து பல விஷயங்கள் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. அதில் அவசர நிலை குறித்த சபாநாயகரின் கருத்து குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது சபாநாயகர் இதனை தவிர்த்திருக்கலாம் என ராகுல் காந்தி அவரிடம் தெரிவித்தார்” என்றார்.