[X] Close

உ.பி.யில் யானை சிற்பங்கள் அமைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு: படேல் சிலை பற்றி கேள்வி எழாதது ஏன்? - உச்ச நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி வாதம்


  • kamadenu
  • Posted: 03 Apr, 2019 18:14 pm
  • அ+ அ-

-,

உ.பி.யில் தனது சிலைகள் மற்றும் யானை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதற்கு எதிரான விமர்சனங்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பதில் அளித்துள்ளார்.

குஜராத்தில் 182 மீட்டர் உயர சர்தார் படேல் சிலை குறித்து கேள்வி எழாதது ஏன் என்றும் அவர் கேட்டுள்ளார்.

மாயாவதி, உ.பி. முதல்வராக இருந்தபோது பொது இடங்களில்உள்ள பூங்காக்கள் மற்றும் நினைவிடங்களில் மாயாவதியின் சிலையும் அவரது கட்சியின் சின்னமான யானையின் சிற்பங்களும் வைக்கப்பட்டன. இதன் மூலம் அரசுப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக கூறி வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, “மாயாவதி சிலைகள் மற்றும் யானை சிற்பங்களுக்கான செலவை பகுஜன் சமாஜ் கட்சி, அரசுக் கருவூலத்தில் செலுத்த உத்தரவிடலாம் என்ற கருத்துக்கு நாங்கள் வந்துள்ளோம்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மாயாவதி தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “குஜராத்தில் 182 மீட்டர் உயர சர்தார் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் 221 மீட்டர் உயர ராமர் சிலை வைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார். மகாராஷ்டிராவில் ரூ.3643.78 கோடியில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கப்படுகிறது. இவை பற்றி எல்லாம் ஊடகங்களோ நீதிமன்றமோ கேள்வி எழுப்பாதது ஏன்?” என்று மாயாவதி கேட்டுள்ளார்.

மேலும் அவர், “எனது சிலைகள் மக்கள் தங்கள் காலத்தில் வாழும் தலித் பெண் தலைவர் மீது வைத்திருக்கும் மரியாதையை காட்டுகிறது. பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தேன். இதற்காக திருமணம் செய்துகொள்வதில்லை என்ற முடிவுக்கு வந்தேன். எனது உயர்ந்த கொள்கைகள் மற்றும் நலத்திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமே அந்த சிலைகள். இவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் சட்டப்பேரவைக்கு எதிராக நான் எவ்வாறு கேள்வி எழுப்ப முடியும்? இந்த வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது. இதனை தள்ளுபடி செய்ய வேண்டும். சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் தலைவர்கள் பற்றி மக்கள் அறிவதற்காக அவர்களின் சிலைகளுடன் இந்த பூங்காக்களும் நினைவிடங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இவை அரசுக்கு வருவாய் ஆதாரமாகவும் உள்ளன. சிலைகளும் நினைவிடங்களும் அமைப்பது நம் நாட்டுக்கு புதிது அல்ல” என்றும் அவர் கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close