மக்களவை சபாநாயகர் தேர்தலில் கே.சுரேஷுக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு


கே.சுரேஷ்

புதுடெல்லி: இன்று நடைபெற இருக்கும் மக்களவை சபாநாயகர் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியானது சுரேஷுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதனிடையே “மக்களவை சபாநாயகர் தேர்தலில் நாங்கள் போட்டியிடும் கட்டாயத்தை அரசுதான் உருவாங்கியது” என்று காங்கிரஸ் வேட்பாளார் கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

மக்களவை தலைவர் பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இண்டியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் இன்று நடைபெற இருக்கிறது.

மக்களவை சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கே.சுரேஷை ஆதரிப்பதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியானது மக்களவை சபாநாயகர் வேட்பாளரை காங்கிரஸ் தன்னிச்சையாக அறிவித்ததாகக் குற்றஞ்சாட்டியது. தொடர்ந்து ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாக மம்தா பானர்ஜியுடன் பேசினார். இந்நிலையில் இன்று சுரேஷுக்கு தனது ஆதரவை திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில் சபாநாயகர் தேர்தல் தொடர்பாக பேட்டியளித்துள்ள கே.சுரேஷ் கூறியிருப்பதாவது: இண்டியா கூட்டணி இத்தேர்தலில் போட்டியிடும் கட்டாயத்தை அரசு தான் உருவாக்கியுள்ளது. மக்களவை சபாநாயகர் தேர்தலுக்காக ஆளுங்கட்சி எங்களை அணுகியபோது நாங்கள் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு அளித்தால் சபாநாயகர் தேர்தலில் ஆதரவு என்றே கூறினோம்.

ஆனால் காலை 11.30 மணி வரை அவர்கள் இது தொடர்பாக எவ்வித உறுதியும் தெரிவிக்கவில்லை. மேலும், அவர்கள் அளித்த பதிலும் திருப்திகரமாக இல்லை. அதனால் எங்கள் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்தனர்.

இந்தத் தேர்தல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைமையின் பிடிவாதத்தையே காட்டுகிறது. அந்தப் பிடிவாதத்தை அவர்கள் கைவிட்டிருந்தால் இந்தத் தேர்தலுக்கான தேவையே இருந்திருக்காது. எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க அவர்கள் விரும்பவில்லை. இந்தத் தேர்தல் நடைபெறுவதற்கான முழுப் பொறுப்பும் என்டிஏவையே சாரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

18-வது மக்களவையின் முதல் கூட்டம் திங்கள்கிழமைத் தொடங்கியது. முதல் நாளில் 262 புதிய எம்.பி.க்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து, 281 எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

புதிய மக்களவை தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (புதன்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மக்களவை தலைவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.