[X] Close

அகிலேஷ், மாயாவதி கூட்டணியில் இருந்து வெளியேறியது மீனவர்கள் கட்சி: பாஜக கூட்டணியில் இணைவது குறித்து பரிசீலனை


  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 07:24 am
  • அ+ அ-

உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் சிங் யாதவ், மாயாவதியின் மெகா கூட்டணியில் இருந்து நிஷாத் கட்சி வெளியேறி உள்ளது. மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் மீனவர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற அந்தக் கட்சி, பாஜக கூட்டணியில் இணைவது குறித்து பரிசீலித்து வருகிறது.

மக்களவைத் தேர்தலுக்காக, உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷின் சமாஜ்வாதி மற்றும் அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில், இந்தக் கூட்டணியில் இணைவதாக கடந்த மார்ச் 22-ம் தேதி நிஷாத் கட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில், பாஜக மாநில தலைவர் மகேந்திர நாத் பாண்டே மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை நிஷாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத் நேற்று திடீரென சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு அகிலேஷ்-மாயாவதியின் மெகா கூட்டணியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.

இதுகுறித்து சஞ்சய் நிஷாத் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, “தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து எங்களுக்கு தொகுதி ஒதுக்கப்படும் என அகிலேஷ் கூறியிருந்தார். ஆனால் அவர் எங்களை ஏமாற்றி விட்டார். மெகா கூட்டணியின் பிரச்சார சுவரொட்டிகளிலும் எங்கள் பெயர் இடம் பெறவில்லை. இதனால், அந்தக் கூட்டணியில் இருந்து விலகி விட்டோம். அடுத்து தனியாகவோ வேறு கட்சியுடன் (பாஜக) கூட்டணி அமைத்தோ போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்றார்.

உத்தரபிரதேச முதல்வராக பொறுப்பேற்றதையடுத்து, யோகி ஆதித்யநாத், தனது கோரக்பூர் மக்களவை தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கோரக்பூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், அகிலேஷ், மாயாவதி கட்சிகளின் ஆதரவில் போட்டியிட்ட நிஷாத் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close