கேஜ்ரிவாலின் ஜாமீனுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை


புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு, விசாரணை நீதிமன்றம் அளித்த ஜாமீனுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று தடைவிதித்தது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி அன்று, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மக்களவை தேர்தலை முன்னிட்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அதனால் தேர்தல் முடிவடைந்ததும் அவர் மீண்டும் திகார் சிறையில் ஆஜரானார்.

இந்நிலையில் அவரது ஜாமீன் மனு, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கடந்த 20-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அவசர மனுவை மறுநாள் தாக்கல் செய்தது. இதனால் கேஜ்ரிவாலின் ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கேஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த ஜாமீனுக்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

அர்விந்த் கேஜ்ரிவாலின் ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணத்தை தகுந்த முறையில் ஆய்வு செய்யவில்லை. அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணத்தை படிப்பது சாத்தியமில்லை என விசாரணை நீதிபதி கூறியது முற்றிலும் நியாயமற்றது. இது ஜாமீன் மனுவில் நீதிமன்றம் முன் தாக்கல் செய்த ஆவணத்தில் விசாரணை நீதிமன்றம் கவனம் செலுத்தவில்லை என்பதை காட்டுகிறது. இதனால் விசாரணை நீதிமன்றம் அளித்த ஜாமீனுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

இன்று விசாரணை: கேஜ்ரிவாலின் ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது கேஜ்ரிவாலுக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கத்துக்கு மாறானது என கூறப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.