பிரஜ்வல் ரேவண்ணா மீது 4-வது வழக்கு: கர்நாடக காவல் துறையின் எஸ்ஐடி அதிரடி


கர்நாடக போலீஸார் பிடியில் பிரஜ்வல் ரேவண்ணா

பல்வேறு பாலியல் புகார்களின் கீழ் கைதாகி சிறையிலிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக நான்காவது வழக்கை, கர்நாடக காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு பதிவு செய்துள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் வழக்குகளை விசாரிக்கும் கர்நாடக காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு, ஹாசன் மக்களவைத் தொகுதியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீது நான்காவது வழக்கை பதிவு செய்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பாலியல் வன்கொடுமைப் பிரிவின் கீழ் பிரஜ்வாலுக்கு எதிராக இதற்கு முன்னதாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய நான்காவது வழக்கு பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்தல், பாதிக்கப்பட்டவரை மிரட்டுதல், புகைப்படம் மற்றும் வீடியோக்களை ரகசியமாக பதிவு செய்தல், அவற்றை சட்டவிரோதமாக பகிர்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எஃப்ஐஆர்-ல் பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ ஹசன் பிரீதம் கவுடா உட்பட மேலும் மூவரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வீடியோ கால் மூலம் பிரஜ்வல் ரேவண்ணா பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் வீடியோக்களை, ப்ரீதம், கிரண் மற்றும் ஷரத் ஆகியோர் பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண், பிரஜ்வலின் பாலியல் துன்புறுத்தலைப் பதிவு செய்ததாகவும், அந்த வீடியோவை மற்றவர்கள் பகிர்ந்ததால், தனது முழு குடும்பத்திற்கும் அவமானம் நேர்ந்ததாகவும் கூறி புகார் அளித்தார். தற்போதைய நான்காவது எஃப்ஐஆர், இந்திய தண்டனைச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது

இதற்கிடையே, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் எம்எல்சி-யும், கர்நாடக முன்னாள் அமைச்சர் ஹெச்.டி.ரேவண்ணாவின் மகனும், பிரஜ்வலின் சகோதரருமான சூரஜ் ரேவண்ணா, கட்சியின் ஆண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் இயற்கைக்கு மாறான பாலுறவு என்பது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஹோலேநரசிபுரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.