“கட்சியை பலவீனப்படுத்த நினைப்போருக்கு...” - சரத் பவார் எச்சரிக்கை


மும்பை: அஜித் பவார் அணியிலிருந்து சரத் பவார் அணிக்கு எம்எல்ஏ-க்கள் சிலர் வர உள்ளதாக கூறப்படும் நிலையில், கட்சியை பலவீனப்படுத்த நினைப்பவர்கள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மோசமான தோல்வியைத் தழுவியது. அஜித் பவார் அணி 4 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேநேரத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், அஜித் பவார் அணியில் உள்ள சில எம்எல்ஏ-க்கள், அம்மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பாக சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு திரும்பத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார் கூறுகையில், "கட்சியை பலவீனப்படுத்த நினைப்பவர்கள் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்கள்.

ஆனால், கட்சியை வலுப்படுத்த உதவுபவர்கள் மற்றும் கட்சியின் புகழுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அதுவும், கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசித்த பின்னரே இதுகுறித்து முடிவு செய்யப்படும்" என்றார். மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி இணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டன.

இதில், பாஜக 9 தொகுதிகளிலும், சிவசேனா 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) கட்சி சார்பில் பிரபுல் படேல் மட்டும் வெற்றி பெற்றார். அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்க பாஜக தலைமை முன் வந்தது. ஆனால், கேபினட் அமைச்சர் பதவியை எதிர்பார்த்த அஜித் பவார் அணி, அதிருப்தியில் பதவியே வேண்டாம் என கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.