சோதனைகளை கடந்து வலிமையாகி உள்ளோம்: அதானி குழும தலைவர் கவுதம் அதானி பேச்சு


புதுடெல்லி: அதானி எண்டர்பிரைசஸின் பங்குதாரர்கள் அடங்கிய ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி கலந்துகொண்டு பேசியதாவது:

மகத்தான வளர்ச்சி திட்டங்களை குழுமம் தற்போது செயல்படுத்தி வருகிறது. முன் எப்போதையும் விட தற்போது நாம் வலிமையாக உள்ளோம். வரவிருக்கும் ஆண்டுகளில் நமது செயல்பாடு மேலும் சிறப்பானதாக இருக்கும். கவுதம் அதானிகவ்தா பூங்கா இப்போது உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தளமாக மாறியுள்ளது.

குழுமம் 2023-ம் ஆண்டில் பல சாதனைகள் படைத்துள்ளது. தேசத்துக்கான முன்னுரிமை, மிகவும் சிக்கலான, பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்தி நம் திறனை வெளிப்படுத்தியுள்ளோம். உள்கட்டமைப்புக்கான திட்டங்களை அதிகரித்து வரும் மத்திய அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. இதுபோன்ற முன்முயற்சிகள் பன்மடங்கு பலனைத்தரும். உலகம் இன்று புவிசார் அரசியல் பதற்றங்கள் நிறைந்து சவாலான சூழ்நிலையை சந்தித்து வரும்போதிலும் இந்தியா எழுச்சியுடன் நடைபோட்டு வருகிறது. இது, இந்தியாவுக்கான தருணம். இந்ததசாப்தத்தின் இறுதிக்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

எங்கள் நிதி நிலை பற்றிய தெளிவற்ற விமர்சனம் (ஹிண்டன்பர்க் அறிக்கை) மற்றும் தகவல் திரிபு பிரச்சாரங்களை வலிமையுடன் எதிர்கொண்டு எந்த சவாலும் எங்கள் குழுவின் அடித்தளத்தை பலவீனப்படுத்த முடியாது என்பதை தற்போது நிரூபித்துள்ளோம். சோதனைகள் எங்களை மேலும் வலிமைப்படுத்தியுள்ளது. இவ்வாறு கவுதம் அதானி கூறினார்.

ரூ.9.26 கோடி சம்பளம்: 2023-24-ம் நிதியாண்டில் கவுதம் அதானி சம்பளமாக ரூ.9.26 கோடியை பெற்றுள்ளார். இது, அவரது நிறுவனத்தில் பணியாற்றும் முக்கிய நிர்வாகிகள் மற்றும் இதர தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் பெறும் சம்பளத்தை விட குறைவாகும். 61 வயதான கவுதம் அதானி தனது குழுமத்தில் உள்ள 10 நிறுவனங்களில் இரண்டு நிறுவனங்களில் இருந்து மட்டுமே ஊதியத்தை பெற்றுள்ளார். 2023-24 ஆண்டுக்கான ஊதியத்தில் ரூ.2.19 கோடி சம்பளம், ரூ.27 லட்சம் மதிப்புள்ள சலுகைகள், இதர சலுகைகள் ஆகியவையும் அடங்கும். மேலும், அதானி போர்ட்ஸ் மற்றும் எஸ்இஇசட் நிறுவனத்திடமிருந்து ரூ.6.8 கோடியை கவுதம் அதானி பெற்றுள்ளார்.

சுனில் பார்தி மிட்டல் (ரூ.16.7 கோடி), ராஜீவ் பஜாஜ் (ரூ.53.7 கோடி), பவன் முஞ்சால் (ரூ.80 கோடி) ஆகியோரின் சம்பளத்துடன் ஒப்பிடும்போது அதானி பெற்ற சம்பளம் மிக குறைவு.