வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுங்கள்: கட்சி எம்.பி-க்களுக்கு நவீன் பட்நாயக் உத்தரவு


புவனேசுவரம்: நாடாளுமன்ற கூட்டத்தில் வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுமாறு தனது கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக் கட்டளையிட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த ஒடிசா மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவிடம், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) ஆட்சியை இழந்தது. இதன் மூலம் ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் தொடர்ச்சியாக 24 வருட ஆட்சி சகாப்தம் முடிவுக்கு வந்தது. பிஜேடி கடந்த காலங்களில் பாஜகவை ஆதரித்தே வந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்னைகளில் பாஜகவுக்கு இக்கட்சி ஆதரவு அளித்துள்ளது. மேலும், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கடந்த 2019 மற்றும் நிகழாண்டில் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாவதற்கும் பிஜேடி ஆதரவு அளித்துள்ளது. கூட்டணியில் அங்கம் வகிக்காமல் இருந்து வந்தாலும் பாஜகவுக்கு ஆதரவு அளித்து வந்த பிஜேடி தற்போது எதிர்க்கட்சியாக செயல்பட போவதாக அறிவித்துள்ளது.

பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக், தனது கட்சியின் 9 மாநிலங்களவை உறுப்பினர்களுடன் இன்று ஓர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதில் வரும் 27-ம் தேதி துவங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுமாறு கட்டளையிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர் சஸ்மித் பத்ரா, “இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை. எதிர்க்கட்சி செயல்பாடுதான். ஒடிசாவின் நலன்களைப் பாதுகாக்க நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம். ஒடிசாவின் உண்மையான கோரிக்கைகளை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து புறக்கணித்தால், வலுவான மற்றும் துடிப்பான எதிர்க்கட்சியாக செயல்படுமாறு பிஜேடி தலைவர் (நவீன் பட்நாயக்) கேட்டுக் கொண்டார்." என்றார்.

மக்களவைத் தேர்தலில் 21 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் முதல் முறையாக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மாநிலங்களவையில் மட்டும் அக்கட்சிக்கு 9 எம்பி-க்கள் உள்ளனர்.