வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றாலும் மகப்பேறு விடுப்பு: மத்திய அரசு விதிகளில் மாற்றம்


பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுகொள்ளும் அரசு ஊழியருக்கும் 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்கி, மத்திய அரசு உரிய விதிகளில் மாற்றம் செய்துள்ளது.

பணிக்குச் செல்லும் பெண்களின் மிகப் பெரும் சவாலாக மகப்பேறு காலம் அமைந்திருக்கும். அந்த சிரமத்தை போக்கும் வகையில் ஊதியத்துடனான மகப்பேறு விடுப்புகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் வழங்கி வருகின்றன. ஆனால் வாடகைத் தாயார் மூலம் குழந்தை பெற்றுகொள்ள விரும்பும் தம்பதிக்கு, இத்தகைய மகப்பேறு விடுப்பு அனுகூலங்களை பெறுவதில் தெளிவான வழிகாட்டுதல் மற்றும் விதிகள் இல்லை.

மருத்துவம், உடல்நல உபாதை மற்றும் தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வோர் அதிகரித்து வருகின்றனர். அப்படி வாடகைத்தாய் மூலம் ’குழந்தை பெறுவோருக்கும்’, அக்குழந்தையை பராமரிப்பதற்கான தொடக்க மாதங்களில் ’கமிஷனிங் தாய்’ (வாடகைத் தாய் மூலம் தமக்கான குழந்தையை பெறும் பெண்) என்பவருக்கும் விடுமுறை அவசியமாகிறது. எனவே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண் அரசு ஊழியர்கள் இனி 6 மாத காலத்துக்கு மகப்பேறு விடுப்பினை பெறலாம்.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்ணின் கணவர் அரசு ஊழியராக இருப்பின், குழந்தை பராமரிப்புக்காக அவரும் 15 நாட்கள் விடுப்பு பெறலாம். குழந்தை பிறந்த நாள் முதல் 6 மாதங்களுக்குள், எப்போது வேண்டுமானாலும் இந்த 15 நாட்கள் விடுப்பை துய்க்கலாம். மத்திய சிவில் சர்வீசஸ் (விடுப்பு), 1972 விதிகளில் இதற்கான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரு வேளை வாடகைத்தாய் மற்றும் அவரிடம் குழந்தையை பெறும் தாய் என இரு பெண்களுமே அரசு ஊழியராக இருப்பினும், அவர்கள் இருவருமே 180 நாட்கள் மகப்பேறு விடுப்பினை பெறுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

தற்போதுள்ள விதிகள், மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு விடுமுறை என்பதை அரசு ஊழியரின் முழு சேவையின்போது அதிகபட்சமாக 730 நாட்களுக்கு பெற அனுமதிக்கின்றன. அதாவது அரசு ஊழியர் 2 குழந்தைகளை பெற்று, பராமரிப்பதற்காக தலா 365 நாட்களுக்கு இந்த விடுமுறையை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வரிசையில் தற்போது அதிகரித்து வரும் வாடகைத் தாயார் போக்கினை முன்னிட்டு, 6 மாத விடுமுறைக்கான திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.