[X] Close

பொதுக்கூட்டத்துக்கு அழைத்துச் செல்வது, வேட்பாளரை சந்திப்பது என குஜராத்தில் களை கட்டும் தேர்தல் சுற்றுலா: வெளிநாட்டினருக்காக சிறப்பு ஏற்பாடு


  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 05:30 am
  • அ+ அ-

வெளிநாட்டினரை கவரும் வகையில், குஜராத்தில் ‘தேர்தல் சுற்றுலா’ களை கட்டியுள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி, மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. இதை முன்னிட்டு இந்த மாநில சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், ‘தேர்தல் சுற்றுலா’வுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு வகையில் ‘தேர்தல் சுற்றுலா’வை ஏற்பாடு செய்துள்ளனர். அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக் கூட்டங்கள், நட்சத்திரப் பேச்சாளர்களின் பிரச்சாரம், பேரணிகள், வேட்பாளர்களை நேரில் சந்திப்பது, உள்ளூர் பிரச்சினைகள், கிராமங்களுக்கு சென்று அங்கு தேர்தல் நேரத்தில் நிலவும் சூழ்நிலை உட்பட தேர்தல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் வெளிநாட்டினருக்கு நேரில் காட்டுவதுதான் இந்த தேர்தல் சுற்றுலாவின் நோக்கம்.

குஜராத்தில் சுமார் 20 சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், தேர்தல் சுற்றுலாவை, வெளிநாட்டினரின் வசதிக்கேற்ப திட்டமிட்டு நடத்துகின்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின் போது 1,800-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் குஜராத்துக்கு வந்து தேர்தல் சுற்றுலாவில் பங்கேற்றனர். இந்தத் தேர்தலில் 2,500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றனர். அவர்களில் பெரும்பாலும் வெளிநாட்டு மாணவர்கள், ஊடகங்களைச் சேர்ந்தவர்கள், அரசியல் நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள்தான் தேர்தல் சுற்றுலாவுக்கு ஆர்வமாக வந்துள்ளனர் என்று குஜராத் சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மனீஷ் சர்மா கூறுகிறார்.

தேர்தல் சுற்றுலாவுக்காகவே ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் வருகின்றனர். அவர்களை குஜராத்தின் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று நேரடியாக தேர்தல் அனுபவம் பெற செய்கிறோம் என்கிறார் அகமதாபாத் அக் ஷர் டிராவல்ஸ் உரிமையாளர் சர்மா. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக, 6 நாட்கள் தேர்தல் சுற்றுலாவுக்கு ரூ.40 ஆயிரம். இரண்டு வாரங்கள் சுற்றுலாவுக்கு ரூ.1.50 லட்சம் வசூலிக்கிறோம் என்கிறார் சர்மா.

‘தேர்தல் சுற்றுலா’ என்ற திட்டம் கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் போது முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின், 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேர்தல் சுற்றுலா பிரபலமடைந்தது.

தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகள் மட்டுமன்றி குஜராத்தில் உள்ள சுற்றுலா தலங்களையும் வெளிநாட்டினருக்கு சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சுற்றிக் காட்டுகின்றனர். தற்போது அந்த வரிசையில் உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபபாய் படேல் சிலையையும் சுற்றுலா இடங்களில் சேர்த்துள்ளனர்.

இந்தத் தேர்தல் சுற்றுலாவில் வெளிநாட்டினர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க ஊக்கப்படுத்த வேண்டும் என்று கோரி, முக்கிய நாடுகளில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு குஜராத்சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அத்துடன் சுற்றுலா திட்டங்கள் குறித்த பிரசுரங்களையும் அவர்கள் அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து சர்மா கூறும்போது, ‘‘தேர்தல் சுற்றுலாவை பிரதமர் நரேந்திர மோடி அங்கீகரித்துள்ளார். அவர்தான் இந்தச் சுற்றுலாவை ஊக்கப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுதொடர்பாக எனக்குக் கடிதமும் எழுதியுள்ளார். அதில், உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் நமது நாடு பெருமை கொள்கிறது.

இந்தியாவில் தேர்தல் என்பது மக்கள் வாக்களிக்கும் மிகப்பெரிய ஜனநாயக நடைமுறை. பன்முகத்தன்மை கொண்டு இந்தத் தேர்தல் சுற்றுலா துறைக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது. மக்கள் சக்தியை காட்டும் மிகப்பெரிய ஜனநாயக நடைமுறை’’ என்று பிரதமர் தெரிவித்துள்ளார் என்றார்.

‘டிராவல் ஏஜென்ட் பெடரேஷன் ஆப் இந்தியா’வின் தேசிய கமிட்டி உறுப்பினர் ஹிதங் ஷா கூறும்போது, ‘‘தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரே இடத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடுவதைப் பார்த்து வெளிநாட்டினர் அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். அவர்களால் நம்ப முடியவில்லை. இதுதான் இந்திய தேர்தலின் தனித்துவம்’’ என்கிறார்.- பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close