பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா முன்னிலையில் இந்தியா - வங்கதேசம் இடையே ஒப்பந்தம் கையெழுத்து


புதுடெல்லி: இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஷசினாவுடன், பிரதமர் மோடி விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கடல்சார் துறை மற்றும் கடல் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது உட்பட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். அவருக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், உயர்அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மத்தியில் பிரதமர்மோடி தலைமையில் 3-வது முறையாக புதிய அரசு பொறுப்பேற்றபின்பு, இந்தியா வரும் முதல் வெளிநாட்டு தலைவர் ஷேக் ஹசினா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற பிரதமர் மோடி பதவியேற்பு விழா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா - வங்கதேசம் இடையேயான பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகள் அதிகரித்து வருகின்றன. அண்டை நாடுகளில் வங்கதேசம் முக்கிய நாடாக விளங்குகிறது. இரு நாடுகளும் 4096 கி.மீ தூரத்துக்கு எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. பாதுகாப்பு, வர்த்தகம், போக்குவரத்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருநாடுகள் இடையேயான ஒத்துழைப்பு விரிவடைந்து கொண்டே இருக்கிறது. தெற்கு ஆசியாவில் இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக பங்குதாரராக வங்கதேசம் உள்ளது. அதேபோல் வங்கதேசத்துக்கும் இந்தியா இரண்டாவது மிகப் பெரிய வர்த்தக பங்குதாரராக உள்ளது. கடந்த 2022-23-ம் ஆண்டில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இந்தியாவுக்கு வங்கதேசம் ஏற்றுமதி செய்துள்ளது.

பிரதமர் மோடியும், ஷேக் ஹசினாவும் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நேற்று சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வர்த்தகம் மற்றும் போக்குவரத்து இணைப்பு உட்பட பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் இரு தலைவர்கள் முன்னிலையில் கடல்சார் துறை மற்றும்பொருளாதாரத்தி்ல உறவுகளைமேம்படுத்துவது உட்பட பலஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றில் டிஜிட்டல் துறை மற்றும்பசுமை திட்ட நடவடிக்கைகளில்இணைந்து செயல்படுவது போன்ற ஒப்பந்தங்கள் முக்கியமானவை. ரயில்வே போக்குவரத்தை ஏற்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்திலும் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.

இதையடுத்து பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது: புது துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான தொலைநோக்குக்கு நாங்கள் தயாராகியுள்ளோம். பசுமை திட்டம், டிஜிட்டல் துறை, கடல் பொருளாதாரம் மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இருநாட்டு இளைஞர்களும் பயன் அடைவர். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா அளித்த பேட்டியில் கூறியதாவது:

வங்கதேசத்தின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடு இந்தியா. இந்தியாவுடனான உறவை வங்கதேசம் மிகவும் மதிக்கிறது. இந்த உறவு கடந்த 1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் உருவானது. வங்கதேசத்தின் விடுதலையில் இந்திய அரசு மற்றும் மக்களின் பங்களிப்பை நான் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். பாதுகாப்பு, வர்த்தகம், போக்கு வரத்து இணைப்பு, நதி நீர் பங்கீடு, எரிசக்தி, பிராந்திய ஒத்துழைப்பு உட்பட பல துறை களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக நாங்கள் ஆக்கபூர்வமாக ஆலோசனை நடத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 1971-ம்ஆண்டு போரில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கும் அவர் மரியாதை செலுத்தினார்