சோலார் குக்கர்கள், அனைத்து அட்டை பெட்டிக்கும் 12% வரி: 53-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு


புதுடெல்லி: ரயில் நிலைய நடைமேடை பயணச் சீட்டு, ஓய்வு அறை கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சோலார் குக்கர், அனைத்து அட்டை பெட்டிகளுக்கு 12% வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை1-ம் தேதி சரக்கு - சேவை வரி(ஜிஎஸ்டி) நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இந்த வரிவிதிப்பு நடைமுறையை ஜிஎஸ்டி கவுன்சில் கண்காணித்து வருகிறது.

நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஜிஎஸ்டி கவுன்சில் கூடுவது வழக்கம். கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி 52-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது. கடந்த 9-ம் தேதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது. மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் மீண்டும் பதவியேற்றார்.

இதைத் தொடர்ந்து சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு 53-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சரின் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:

ஜிஎஸ்டி சட்டம் 73-வது பிரிவின் கீழ் பல்வேறு நிறுவனங்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. இதற்கான வட்டி, அபராதம் ரத்து செய்யப்படுகிறது. ரூ.20 லட்சம் வரையிலான வரிவிதிப்பு பிரச்சினைகளுக்கு ஜிஎஸ்டி மேல்முறையீடு தீர்ப்பாயத்தை அணுகலாம். ரூ.1 கோடி வரை உயர் நீதிமன்றம், ரூ.2 கோடி வரை உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். சிறு வணிகர்கள் ஜிஎஸ்டி வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால வரம்பு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

போலி ரசீது பிரச்சினைக்கு தீர்வு காண ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் நடைமுறை நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்படும். பால் கேன்களுக்கு 12% வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

தீயணைப்பான்கள் உட்பட அனைத்து வகை தெளிப்பான்கள், சோலார் குக்கர்களுக்கு 12 சதவீத வரி விதிக்கப்படும். அனைத்து வகையான அட்டைப் பெட்டிகளுக்கும் 18-லிருந்து 12% ஆக வரி குறைக்கப்படும். ரயில்வே துறையில் பயன்படுத்தப்படும் பேட்டரி வாகனங்கள், ரயில் நிலைய நடைமேடை பயணச்சீட்டு, ஓய்வு அறைகள், காத்திருக்கும் அறை கட்டணங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.

கல்வி நிலையங்களுக்கு வெளியே உள்ள விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் செலுத்தும் கட்டணத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படும். எனினும் ஒரு மாதத்துக்கு ரூ.20,000 வரை மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும். குறைந்தபட்சம் 90 நாட்கள் விடுதியில் தங்கியிருக்க வேண்டும்.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு உறுதிப் பூண்டுள்ளது. இதற்கு மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்