‘சட்ட விரோதமாக கட்டப்பட்டதால் ஜெகன் கட்சி அலுவலகம் இடிப்பு’ - தெலுங்கு தேசம் கட்சி


அமராவதி: தாடேபள்ளியில் கட்டப்பட்டிருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம், நீர்பாசனத் துறையின் இடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டதால் இடிக்கப்பட்டது என்று தெலுங்கு தேசம் கட்சி சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர்பாசனத் துறையின் இரண்டு ஏக்கர் நிலத்தில் எதிர்க்கட்சியின் அலுவலகம் சட்டவிரோதமாக கட்டப்படுவதாக தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையம் (CRDA) மற்றும் மங்கலகிரி தாடேபள்ளி நகராட்சி (MTMC) ஆணையர்களுக்கு புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் கட்டிய சட்டவிரோத கட்டிடத்தை இடிக்கும் பணி MTMC அதிகாரிகளின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி, முதல்வராக இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தன்னுடைய கட்சி அலுவலகம் கட்ட நிலத்தினை ஒதுக்கியுள்ளார்.

இரண்டு ஏக்கரில் கட்டிடத்தைக் கட்டி விட்டு, அதன் அருகில் இருக்கும் 15 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க ஜெகம் மோகன் ரெட்டி திட்டமிட்டிருந்தார். அந்த இரண்டு ஏக்கரையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வழங்குவதற்கு நீர்பாசனத் துறை ஒப்புதல் அளிக்கவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தனது கட்சி அலுவலக கட்டிடம் இடிக்கப்பட்டதற்கு ஜெகன் மோகன் ரெட்டி எதிர்வினை ஆற்றியுள்ளார். அவர் கூறுகையில், "முதல்வர் சந்திரபாபு நாயுடு பழிவாங்கும் அரசியலை அடுத்த கட்டட்டத்துக்கு நகர்த்தியுள்ளார். மேலும் அவர் சர்வாதிகாரி போல செயல்படுகிறார்" எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

கட்டிட இடிப்பு செயல்பாடுகளை நிறுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், தெலுங்கு தேசம் கட்சித் தலைமையிலான என்டிஏ அரசு கட்டிடத்தை இடிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சாடியிருந்தது.