டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஜாமீன் நிறுத்தி வைப்பு: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு


புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில்டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு, டெல்லி ரோஸ் அவென்யூநீதிமன்றம் அளித்த ஜாமீனை, டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று நிறுத்தி வைத்தது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். மக்களவைதேர்தலுக்காக அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. தேர்தல் முடிந்ததும் அவர் மீண்டும் சிறையில் ஆஜரானார்.

இந்நிலையில் கேஜ்ரிவால் மீதான ஜாமீன் மனு நேற்று முன்தினம் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்ரூவர்கள் அளித்தவாக்குமூலத்தின்படி கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை என அவரது வழக்கறிஞர் வாதாடினார். இதையடுத்து கேஜ்ரிவால் ரூ.1லட்சம் பிணைத் தொகை செலுத்தி ஜாமீனில் செல்ல ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நேற்று முன்தினம் இரவுஉத்தரவிட்டது. இதனால் கேஜ்ரிவால் இன்று வெளிவருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை நேற்று அவசர மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விடுமுறைகால அமர்வு நீதிபதிகள் சுதிர் குமார் ஜெயின் மற்றும் ரவீந்தர் துடேஜா ஆகியோர் விசாரித்தனர். அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ராஜூ வாதிட்டதாவது:

அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக வலுவான ஆதாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவா 7 நட்சத்திர விடுதியில் அர்விந்த் கேஜ்ரிவால் தங்கியிருந்தபோது கொடுக்கப்பட்ட லஞ்சப் பணத்தின் போட்டோக்கள் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அர்விந்த் கேஜ்ரிவாலுடன் நெருங்கிய தொடர்புடைய சன்ப்ரீத் சிங் என்பவரிடம் பணத்தை கொடுக்கச் சொல்லி வினோத் சவுகான் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வினோத் சவுகான் ஹவாலா குற்றங்களில் ஈடுபட்டவர். அவர் கேஜ்ரிவால் மூலமாக டெல்லி குடிநீர் வாரியத்தில் பலருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளார். டெல்லியிலிருந்து கோவாவுக்கு ரூ.25.5 கோடி சென்றதில் வினோத்சவுகான் முக்கிய நபர். இந்தப் பணம் ஆம் ஆத்மிக்கு வழங்கப்பட்ட ரூ.100 கோடி லஞ்சத்தில் ஒரு பகுதி.

இவ்வாறு சொலிசிடர் ஜெனரல் ராஜூ கூறினார்.

இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை, விசாரணை நீதிமன்றம் அளித்த ஜாமீன் நிறுத்தி வைக்கப்படுகிறது என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று திகார் சிறையில் இருந்து ஜாமினில் வெளி வர முடியவில்லை