[X] Close

வங்கதேச அகதிகள் ‘கரையான்களா?’ - அமித் ஷா-வுக்கு அமெரிக்க அரசுத்துறை  அறிக்கையில் கண்டிப்பு


amit-sha-termites-comment-bjp-american-state-dept-report-condemns-bangladesh-refugees

  • முத்துக்குமார்
  • Posted: 21 Mar, 2019 18:17 pm
  • அ+ அ-

அமெரிக்க அரசு மனித உரிமை அக்கறைகள் துறை, அசாமில் தங்கியிருக்கும் வங்கதேச அகதிகளை ‘கரையான்கள்’ என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வர்ணித்ததை சிகப்புக் குறியிட்டு கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.

கடந்த வாரம் நாடுகளின் மனித உரிமை நிலவரங்கள் குறித்த அறிக்கைகளை அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ வெளியிட்டார். மேலும் அவர் கூறும்போது, “நம் நண்பர்கள் கூட, நம் கூட்டாளிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர்” என்று அறிக்கையை வெளியிட்டு கருத்து தெரிவித்தார். 

“நாங்கள் இந்த அறிக்கைகளையும் சம வலிமையுடன் ஆவணப்படுத்துகிறோம். மனித உரிமைகள் சவால்களையும் நாங்கள் அடையாளப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆகவே அமெரிக்கச் செல்வாக்கையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி ஒவ்வொரு நாடும் சீரான முறையில் மனித உரிமை நடைமுறைகள்  வழியில் நடக்குமாறு செய்வோம்.” என்றார்.

பிற நாடுகளின் மனித உரிமைகள் நடைமுறைகளை அமெரிக்க அரசு கடந்த 40 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. இந்த அறிக்கைகளில் அளிக்கப்படும் விவகாரங்களுக்கு இந்திய அரசு வெளிப்படையாக விமர்சனங்களை தெரிவித்ததில்லை. 

இது குறித்து அமெரிக்க அரசுத்துறை தன் சமூக வலைத்தளப் பக்கத்தில், “இந்த அறிக்கை அரசுகளையும், அடக்குமுறை ஆட்சிகளையும் மனித உரிமைகளை மதித்து நடந்து கொள்ளுமாறு மாற்றும், இந்த இடங்களில் எதிர்ப்புக்குரல்கள் நசுக்கப்படுவதும் சகிப்புத்தன்மை மற்றும் மரியாதைக்கான ஆழமான உந்துதல்கள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன, அவற்றின் போக்கை இந்த அறிக்கை மாற்றும்” என்று குறிப்பிட்டுள்ளது. 

இந்த அறிக்கையில் அமித் ஷா பெயரைக் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளதாவது: “செப்.24-ம் தேதி ஆளும் பாஜக தலைவர் அமித் ஷா, இவர் அஸாமில் இருக்கலாம் என்று கருதப்படும் வங்கதேசத்தினரை  ‘கரையான்கள்’ என்று வர்ணித்ததோடு குடிமக்கள் பட்டியலில் இருந்து இவர்கள் பெயர் அடிக்கப்படும் என்று கூறினார்” என்று குறிப்பிட்டுள்ளது. 

முதலில் ராஜஸ்தான் கூட்டம் ஒன்றில் வங்கதேசத்தவர்களை ‘கரையான்கள்’ என்று அமித் ஷா வர்ணித்தார், பிறகு டெல்லியில் அரசியல் நிகழ்வு ஒன்றில் இதே வார்த்தையை மீண்டும் பயன்படுத்தினார்.  மேலும் லோக்சபா தேர்தல் முடிந்து பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் நாட்டில் வாழும் சட்டவிரோத குடியேறிகள் அடையாளம் காணப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார். 

இது குறித்து அமெரிக்க அரசுத்துறை அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கும் போது, “ஐநா மனித உரிமைகள் ஆணையம் மற்றும் அரசுசாரா சமூக ஆர்வலர்களும் ஆண்டு முழுதும் அகதிகளுக்கு எதிரான வசைமொழிகளும், குறிப்பாக ரோஹிங்கியர்களுக்கு எதிரான வசைமொழிகளும், தற்போது 2019 தேர்தல் சமயங்களிலும் இதே வார்த்தைப் பிரயோகங்கள், வர்ணனைகள் இடம்பெற்று வருகின்றன, இது அகதிகள் சமூகத்தினரிடையே பாதுகாப்பின்மையை உருவாக்கியுள்ளது” என்று கூறியுள்ளது. 

கடந்த அக்டோபரில் 7 ரோஹிங்கிய முஸ்லிம்கள் தாங்களை மீண்டும் மியான்மாருக்கு அனுப்பும் அரசு முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தோல்வியடைய மீண்டும் மியான்மாருக்கு அனுப்பப்பட்டனர். இது குறித்து இந்த அறிக்கையில், “தங்கள் எல்லைக்குள் பாதுகாப்பு கேட்கும் அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் தங்களது நீண்ட பாரம்பரியத்தை இந்தியா தற்போது புறக்கணித்து வருகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளது. 

‘சரிந்து வரும் பத்திரிகை சுதந்திரம்’

அதே போல் இந்த அறிக்கையில் பத்திரிகை சுதந்திரம் பற்றி கூறும்போது, இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் சரிந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளது. 

“பத்திரிகையாளர்கள், என்.ஜி.ஓ.க்கள் தரப்பிலிருந்து, உள்ளூர் மற்றும் தேசிய மட்டத்தில் அரசு அதிகாரிகள் விமர்சன ஊடகங்களின் குரல்களை அடக்கி ஒடுக்கி வருவதாகப் புகார் எழுப்பியுள்ளனர். அதாவது விமர்சன ஊடகங்கள் பல்வேறு விதங்களில் அச்சுறுத்தவும் படுகின்றன. இந்த அச்சுறுத்தல்கள் உடல் ரீதியாகவும்  நிகழ்கிறது. அவர்களின் ஸ்பான்சர்களைக் குறிவைப்பது, அற்பத்தனமான வழக்குகளைப் போடுவது என்று விமர்சனங்கள் ஒடுக்கப்படுகின்றன” என்று இந்த அமெரிக்க அரசுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு உதாரணமாக ஆதார் திட்டத்தை விமர்சித்து கட்டுரை வெளியிட்ட ட்ரைபூன் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஹரீஷ் காரே ராஜினாமா செய்த விவகாரத்தைக் குறிப்பிட்டதோடு, தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டங்கள் குறித்த நேரலை தொலைக்காட்சி ஒளிபரப்புகளை தமிழக அரசின் கேபிள் நெட்வொர்க் தடுத்ததையும் இந்த அறிக்கைக் குறிப்பிட்டுள்ளது. 

மேலும் இந்த அறிக்கை, தவறான நடத்தைகளுக்கு அரசு தரப்பிலிருந்து எந்த ஒரு பொறுப்பும் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, “தனிப்பட்ட வழக்குகளில் விசாரணைகள் நடைபெற்றன. ஆனால் அமலாக்கத்தில் குறைபாடு இருந்து வருகிறது.  பயிற்சி பெற்ற போலீஸ் அதிகாரிகள் எண்ணிக்கை குறைபாடு மற்றும் அதிக சுமை ஆனால் ஆட்கள் குறைவாக இருக்கும் நீதிமன்ற அமைப்பு, ஆகியவை குற்ற வழக்குகளில் தண்டனைகள் பெரிய அளவில் இல்லாமல் குறைவாக இருப்பதற்குக் காரணமாகியுள்ளன என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close